மூட்டுவலிக்கு முடிவு கட்டுவோம்!

  டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்

 

Too Soon, Too Late, Just Right: Ideal Timing for Knee Replacements

 


பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பரின் மனைவிக்கு நடுத்தர வயது. அவருக்கு வலது கால் வளைந்திருந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்ப நிகழ்வில் அவரைச் சந்தித்தபோது, “நீங்கள் காலாகாலத்தில் எலும்பு டாக்டரைப் பார்த்து ஓர் ஆபரேஷன் செய்துகொண்டால் நல்லது” என்றேன்.

 “காலில் தொந்தரவு எதுவும் இல்லாதபோது ஆபரேஷன் செய்துகொள்ளச் சொல்கிறீர்களே! நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் கேலியாகவும் கேட்டார்.

அவருக்கு இருக்கிற பிரச்சினையைப் புரிய வைப்பதற்கு அன்றைக்கு அவர் வாய்ப்பு தரவில்லை. அப்புறம் நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதே முழங்கால் மூட்டில் வலி வந்து துடித்துக்கொண்டிருந்தவரை, அவரது கணவர் என்னிடம் சிகிச்சைக்கு அழைத்துவர, பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

Corrective Osteotomy for Malunited Diaphyseal Forearm Fractures Using  Preoperative 3-Dimensional Planning and Patient-Specific Surgical Guides  and Implants - Journal of Hand Surgery

“கால் உட்புறமாக வளைந்திருந்தால் மூட்டில் சமநிலை சிதையும். சீக்கிரத்தில் மூட்டு பாதிக்கப்படும். அது மூட்டு மாற்றுச் சிகிச்சைவரை கொண்டு செல்லும். அதைத் தடுக்க, மூட்டைச் சமநிலைக்குக் கொண்டுவரும் ஆபரேஷன் செய்ய வேண்டும். இதற்கு ‘மூட்டு சீர்படுத்தும் ஆபரேஷன்’ (Corrective Osteotomy) என்று பெயர். இது ஓர் எளிய ஆபரேஷன். கால் உட்பக்கமாக வளைந்திருப்பவர்கள் நடுத்தர வயதுக்குள் இந்த ஆபரேஷனைச் செய்துகொண்டால் நல்லது. மூட்டு பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்கவும், மூட்டு மாற்றுச் சிகிச்சையைத் தள்ளிப்போடவும் இது உதவும். காலம் கடத்தினால், இந்தச் சிகிச்சையின் முழுப்பலனையும் பெற முடியாது. எனவேதான், உங்கள் மனைவியிடம் அப்போதே எச்சரித்தேன். ஆனால், அவரோ தேவையில்லாமல் ஆபரேஷன் செய்யப் பரிந்துரைப்பதாக என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்” என்று அவரது கணவரிடம் விளக்கம் சொன்னேன்.

பிறகு, எலும்பு மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்று காண்பித்தபோது “இப்போது ‘மூட்டு சீர்படுத்தும் ஆபரேஷன்’ செய்யும் நிலைமையில் மூட்டு இல்லை. அது அடுத்த கட்டத்துக்குத் தாண்டிவிட்டது. ‘மூட்டு மாற்றுச் சிகிச்சை’தான் செய்ய முடியும்” என்றவர், அந்த ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். அணை நிரம்பும்வரை காத்திருந்தால் கரை உடைந்துவிடுகிற மாதிரி மூட்டில் வளைவு/வீக்கம் பிரச்சினை உள்ளவர்கள் அங்கு வலி வரும்வரைக் காத்திருந்தால், சிகிச்சைகள் கூடுதலாகும் என்பதைப் புரிந்தகொள்ளவே அதைச் சொன்னேன்.

என்ன பரிசோதனைகள்?

மூட்டில் வலி, வீக்கம் ஏற்பட்டால், உடனே குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் எந்த வகையான மூட்டுவலி என்பதைத் தெரிந்துகொண்டு பொருத்தமான சிகிச்சையைப் பெறுங்கள். குடும்ப மருத்துவர் யோசனை சொன்னால், எலும்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடருங்கள்.

தானியா வகைகள் -

        தடுப்பது எப்படி?

        ‘மூட்டுப் பிரச்சினையைத் தடுக்கமுடியாதா? என்று ஏக்கத்துடன் கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். வயதாவதை எப்படித் தடுக்கமுடியாதோ, அப்படித்தான் முதுமை மூட்டுப் பிரச்சினையும்! அதேவேளையில் வேகமாக அது பாதிக்க இருப்பதைத் தடுக்க முடியும். எப்படி?

சிறு வயதிலிருந்தே பால், தயிர், பால் பொருள்கள், பருப்பு, பயறு, சோயா வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு புத்தம்புது இரும்புபோல் வலுவடைகிறது.

அடுத்து, அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், வெண்டைக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, முட்டைக்கோஸ், முருங்கை, இறைச்சி, மீன், முட்டை, கடல் உணவுகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, கம்பு, சோளம், கேழ்வரகு, பட்டாணி, சுண்டல் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் அதிகம்.  அது எலும்பு பலவீனம் ஆவதைத் தடுக்கிறது.

வைட்டமின்–டி கிடைக்க, தினமும் அரை மணி நேரம் வெயிலுக்குச் செல்லுங்கள். வயதுக்கு ஏற்ப எடை இருக்கட்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவை கட்டாயம். இத்தனையும் செய்தால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும்; பிரச்சினை ஆவது தள்ளிப்போகும்.

மேலும், ரயில் புறப்பட பச்சை விளக்கு எரிந்தால் மட்டும் போதாது; நிலையக் காவலர் பச்சைக்கொடி காண்பிக்க வேண்டியதும் முக்கியம். அதுபோல் மூட்டுவலி குறைய சிகிச்சைகளும் பயிற்சிகளும் அவசியம்தான் என்றாலும், அதிக நேரம் நின்றுகொண்டிருப்பதைத் தவிர்ப்பதும் முக்கியம். நின்றுகொண்டே பணி செய்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்களுக்கு அமர்ந்து எழலாம். அமர்ந்துகொண்டே இருப்பவர்கள் எழுந்து, அதே கால அளவுக்குக் காலை மடக்கி நீட்டலாம்; நடக்கலாம். மூட்டுக்கு ஓய்வில்லாமல் கொடுக்கும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளலாம். புகைபிடிக்க வேண்டாம்.

தேங்காய்ப் பால் நல்லதுதான். அதற்காக முழுத் தேங்காயை விழுங்கலாமா? அதுமாதிரி மூட்டின் பாதுகாப்புக்கு உடற்பயிற்சி அவசியம்தான். அதேநேரத்தில் அளவுக்கு மீறிய பயிற்சிகளும் மூட்டுக்கு ஆகாது. குறிப்பாக, அதிக எடை தூக்கும் ஜிம் பயிற்சிகள் வேண்டாமே!

மூட்டுவலிக்கு சிகிச்சை

முதுமையில் மூட்டுவலி ஏற்படுபவர்களுக்கு பலதரப்பட்ட சிகிச்சைகள் தரப்படுகின்றன. ஆரம்பநிலையில் உள்ள மூட்டுவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடைத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். பொதுவாக, மூட்டுவலிக்கு வலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் நீண்ட காலம் சாப்பிடக்கூடாது. இதனால், சிறுநீரகம் பழுதாகும்; எலும்புகள் பலவீனம் அடையும்.

சிலருக்கு மூட்டுக்குள் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினால், குருத்தெலும்பானது வளரும் தன்மையைப் பெறும்; உராயும் தன்மையைக் குறைத்துக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இந்த ஊசி போட்டு 4 நாட்கள்வரை வலி இருக்கும். அதன் பிறகுதான் வலி விடும். வருடத்துக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். மூட்டுவலிப் பிரச்சினை ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இது நல்ல பலன் தரும்.

இன்னும் சிலருக்கு ‘ஆர்த்ராஸ்கோப்’ மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் (Arthroscopic lavage) செய்யப்படும். மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருள்கள் இதில் வெளியேறிவிடும். சிலருக்கு சைனோவியல் சவ்வு சிதைந்திருக்கும். இத்தகைய பாதிப்பையும் இந்தச் சிகிச்சையில் சரிப்படுத்த முடியும். இதன் பலனால் மூட்டுவலி இல்லாமல் போகும்.




செயற்கை மூட்டு மாற்றுச் சிகிச்சை!

        படுமோசமான கலவரத்தை உள்ளூர் போலீஸால் கட்டுப்படுத்த முடியாது. அப்போது ராணுவம்தான் வரவேண்டும். மூட்டில் பாதிப்பு மிக மோசமாக இருந்தால், ஆரம்ப சிகிச்சைகள் திருப்தி தராது. அப்போது ‘செயற்கை மூட்டு மாற்றுச் சிகிச்சை’ (Total Knee Replacement) மட்டுமே மூட்டுவலிக்கு முடிவுகட்டும். உலோகமும் பாலிஎதிலீனும் (Polyethylene) கலந்த செயற்கை மூட்டைப் பொருத்தும் அறுவை சிகிச்சை இது.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயம்… ‘மூட்டு மாற்றம்’ என்றதும் முழங்கால் மூட்டு மொத்தத்தையும் அப்படியே கொத்தி எடுத்துவிட்டு, உலோக மூட்டை அங்கு பொருத்துவதாக அர்த்தப்படுத்தக் கூடாது. மூட்டில் குருத்தெலும்பு பாதித்துள்ள பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, பதிலாக அந்த இடத்தில் செயற்கை மூட்டைப் பொருத்தும் சிகிச்சை இது. மூட்டின் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் பாதிப்பு இருந்தால், இந்தச் சிகிச்சையால் சரி செய்ய முடியாது.

        மூட்டு மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் முழுதாகத் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையும், நம் நாட்டுக் கழிப்பறையைப் (Indian toilet) பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டால், மற்றவர்களைப்போல் வெகு சாதாரணமாக வலி இல்லாமல் இருக்கலாம். அதேவேளை, சிகிச்சைக்குப் பிறகு இதற்கென இருக்கும் பிரத்தியேகத் தசைப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அப்போதுதான் மூட்டுத்தசைகள் வலுப்பெற்று, மூட்டுவலி திரும்பாது.

        முன்பெல்லாம் இந்தச் செயற்கை மூட்டுகள் 6 வருடம்தான் தாக்குப்பிடிக்கும். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் ஒரு செயற்கை மூட்டு 20 ஆண்டுகள்வரை உழைக்கிறது. இதைப் பொருத்திக்கொண்டால், நடக்கலாம்; மாடிப்படிகளில் ஏறலாம்; சைக்கிள், கார் ஓட்டலாம். என்ன, கால்பந்து மட்டும் விளையாட முடியாது. பரவாயில்லையா?

காமதேனு 21.10. 2018 இதழ்.

பெட்டிச் செய்தி:

இவையும் தேவை!

புரதம், கால்சியம், வைட்டமின்-டி ஆகிய சத்துகள் மட்டுமே எலும்புகளுக்குப் பாதுகாப்பு தராது! மக்னீசியம், வைட்டமின்-ஏ, பி6, பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளும் தேவை. மக்னீசியம் எலும்பு பலவீனம் ஆவதைத் தடுக்கும்; குருத்தெலும்பை வலுவாக்கும். சிறுதானியங்கள், கீரைகள், மீன், எண்ணெய் வித்துக்கள், பீன்ஸ், நட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் அதிகமுள்ளது. வைட்டமின்-பி6, பி12, ஃபோலிக் அமிலம் இந்த மூன்றும் எலும்பு வீக்கத்துக்குக் காரணமான ‘ஹோமோசிஸ்டினை’க் கட்டுப்படுத்தும். முழுத்தானியங்கள், பச்சையிலைக் காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி, ஈரல், பால், தயிர், பழங்களில் இவை அதிகம். கேரட், பப்பாளி, மாம்பழம், பூசணி, பசலைக்கீரை, ஈரல், வெண்ணெய் போன்றவை வைட்டமின்-ஏ நிறைந்தவை.

=========================================================================================================== முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,                Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                   Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

=================================================================================================================

 

Comments

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?