முதுகு வலிக்குத் தீர்வு எது?





 

                                                 முதுகு வலிக்குத் தீர்வு எது?


                                     டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள். பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும். சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும். அந்த மாதிரி காரணங்களில் மிகவும் முக்கியமானவை முதுகெலும்பு இடைச் சவ்வு விலகுவதும் (Disc prolapse) வீக்கம் (Disc bulge) ஏற்படுவதும்.

இந்தக் காரணங்களால் முதுகெலும்பை ஒட்டி தண்டுவடம் செல்லும் துவாரம் சிறுத்துவிடுகிறது. இதனால் அங்குள்ள நரம்பு அழுத்தப்படுகிறது. அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் முதுகிலிருந்து காலுக்குப் பரவும் வலியை ‘சியாட்டிகா’ (Sciatica) என்கிறோம்.

ஆரம்பத்தில் இந்த வலி அவ்வப்போது கீழ்முதுகில் மட்டும் ஏற்படும். பெரும்பாலானோர் இதை ‘வாய்வு வலி’ எனத் தீர்மானித்து சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று வலி கடுமையாகி பின்புறத் தொடைக்கோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பாயும். படுத்து உறங்கும்போது வலி குறைந்து, நடக்கும்போது அதிகமாகும். நாளாக ஆக காலில் மரத்துப்போன உணர்வும் ஏற்படும். இதைக் காலத்தோடு கவனிக்காவிட்டால் கால் தசை மெலிந்துவிடும்.

அந்தக் கொடுமை எனக்கு நடந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு எனக்குத் ‘தேசிய விருது’ கொடுத்தது. விருது வாங்க மறுநாள் காலை டெல்லிக்கு விமானத்தில் செல்ல வேண்டும். முதல்நாள் மாலையில் என் இடது காலில் கடுமையாக வலி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் நான் இரு சக்கர வாகனத்தில் வழுக்கி விழுந்திருந்தேன். (உபயம் - திருஷ்டிப் பூசணி). அதனால்தான் அந்த வலி என முடிவுக்கு வந்தேன். மறுநாள் பயணத்துக்குத் தயாரானேன். காலையில் கால் ஒருபக்கமாக இழுக்கத் தொடங்கியது. கட்டிலை விட்டு இறங்கினாலே கால் வலி கொன்றது. ரொம்பவே சிரமப்பட்டு, சக்கர நாற்காலி உதவியுடன் டெல்லிக்குச் சென்று விருது வாங்கி வந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் என் கால் வலிக்குக் காரணம் கண்டுபிடிக்க மதுரைக்குச் சென்றேன். பரிசோதித்துப் பார்த்ததில் 4வது, 5வது லம்பார் எலும்புகளில் சவ்வு விலகி, நரம்பு வெளியாகும் பாதை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது புலப்பட்டது.

“விலகியிருக்கும் சவ்வை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும்” என்றார் மதுரை மருத்துவர். அதற்கு நான் சம்மதித்துவிட்டேன். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கு உடன்பாடில்லை. முதுகெலும்பில்  ஆபரேஷன் என்றவுடன் பலருக்கும் ஏற்படும் பயம் அவர்களையும் பற்றிக்கொண்டது. உறவினர்கள் ஒருபுறம், “முதுகெலும்பு நரம்பிலா ஆபரேஷன் செய்யப்போகிறீர்கள்? அவசரப்படாதீர்கள். கால் நரம்பில் கத்தி பட்டுவிட்டால் பிறகு நடக்கமுடியாமல் போய்விடும். அப்படித்தான் அவருக்கு ஆனது; இவருக்கு ஆனது” என்று ‘எதிர்மறை’ கதைகளைச் சொல்லி என் வீட்டாரின் அச்சத்தீயில் எண்ணெய் ஊற்றினார்கள்.  

அதனால் ‘ஒரு மாதம் நான் ஓய்வெடுப்பது’ என்ற முடிவுக்கு வந்தார்கள். வாரங்கள் ஆமைபோல் நகர்ந்தன. எனக்கோ ஒரே சமயத்தில் நூறு தேள்கள் கொட்டிய கொடிய வேதனை. நிற்க, நடக்க முடியவில்லை. உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. உடல் இளைத்தது. இடது கால் மெலியத் தொடங்கியது. எத்தனை நாட்கள்தான் வலியோடு படுத்தே கிடப்பது? எனக்குப் பயம் கூடியது. ‘இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை; உடனே ஆபரேஷன் செய்துகொள்வது’ என்று நான் முடிவு செய்தேன். என் மகன் திவாகர் கோவையில் மருத்துவர். திவாகரின் நண்பர் ‘ஸ்பைன் சர்ஜன்’ கார்த்திகேயனை வடவள்ளி கிளினிக்கில் சந்தித்தேன்.

அடுத்த நாளில் ஆபரேஷன். எவ்வித சிக்கலும் இல்லாமல் என் தண்டுவட நரம்பில் முட்டி மோதிக் கொண்டிருந்த சவ்வை அகற்றினார் கார்த்திகேயன். மறுநாளில் நிற்க ஆரம்பித்தேன். என்ன மாயம்! காலில் வலியே இல்லை. பிரசவ வலி கடந்துபோன தாய்க்கு ஏற்படும் சந்தோஷம் எனக்கு. மூன்றாம் நாளில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தாம் நாளில் மகன் வீட்டுக்கு வந்துவிட்டேன். கால் மரத்துப்போனது, கால் மெலிவு எல்லாமே அடுத்த 6 வாரங்களில் துப்புரவாகச் சரியாகிவிட்டது. தேவையில்லாமல் ஒரு மாதம் கொடூரமான கால் வலியால் கஷ்டப்பட்டோமே என்று பின்னாளில் வருத்தப்பட்டேன். ஒரு தகவலுக்குச் சொல்கிறேன்…என்னைப்போல் இந்தக் கொடுமையை அனுபவித்து ஆபரேஷனில் மீண்டெழுந்த பிரபலங்கள் இவர்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் அஜித்.

ஆபரேஷன் எப்போது அவசியம்?

முதுகெலும்புச் சவ்வு வீங்கியிருந்து, முதுகில் மட்டுமே வலி; தொடையில்/காலில் வலி இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இது சியாட்டிகாவுக்கு முந்தைய நிலை. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் இதை உறுதி  செய்ய முடியும். ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி, ட்ராக்ஷன் சிகிச்சை, வலி குறைப்பு மாத்திரைகள்/ஊசிகள்  போன்றவற்றால் வலி சரியாகிவிட வாய்ப்புகள் அதிகம். சிலருக்குத் தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு. ஆனால், சவ்வு விலகியிருந்து, வலி கடுமையாகி கால் மரத்துப்போனால், முதுகெலும்புகள் வீங்கியிருந்தால் ஆபரேஷன் அவசியம்.

முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்: இந்த ஆபரேஷனை நரம்பில் செய்வதில்லை. பாதிக்கப்பட்ட தண்டுவடத்தைச் சார்ந்த முதுகெலும்பில்தான் செய்கிறார்கள். கழுத்தை நெரிப்பவரின் கைகளை எடுத்துவிடுகிற மாதிரி, கால் நரம்பை அழுத்திக்கொண்டிருக்கும் சவ்வை மட்டும் அகற்றிவிட்டு, பதிலாக அந்த இடத்தில் உலோகச் சவ்வைப் பதிக்கிறார்கள். இன்றைக்குள்ள நவீன கருவிகளின் துணையுடன் இந்த ஆபரேஷனை நுட்பமாகச் செய்துவிடுவதால் பயப்படத் தேவையில்லை.

இன்னொன்று. இப்போது முதுகைக் கிழிக்காமல் லேப்ராஸ்கோப் உதவியுடன் முதுகில் சில துளைகள் மட்டும் போட்டு நவீனமாகவும் (Lumbar Endoscopic Discectomy) இதைச் செய்கிறார்கள். ஆனால், பயனாளிக்கு எந்த வகை ஆபரேஷன் தேவை என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். எதுவானாலும் ஆபரேஷனுக்குப் பிறகு முதுகுத் தசைகளுக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகுக்குப் பலம் கிடைக்கும். முதுகுவலி மீண்டும் ஏற்படாது.

முதுகெலும்பு விலகிவிட்டால்?

இனியா ஓர் இளம் மனைவி. அவள் ஒருமுறை வீட்டுப் பரணிலிருந்த சூட்கேஷை ஏணி வைத்து இறக்கும்போது ஏணிப்படியில் தடுமாறி தரையில் விழுந்துவிட்டாள். இடுப்பிலும் காலிலும் பலத்த அடி; அதிக வலி. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் முதுகெலும்பில் சவ்வு விலகியிருந்தது. அத்துடன் 4வது, 5வது லம்பார் எலும்புகளும் விலகியிருந்தன. எலும்பு மருத்துவரிடம் அனுப்பிவைத்தேன். இனியா தாய்மையை எதிர்நோக்கிக்கொண்டிருப்பவர் என்பதால், ‘விலகிய சவ்வை அகற்றுவது மட்டும் சரிப்படாது; இடம் மாறிய எலும்புகளை சரியான இடத்துக்குக் கொண்டுவந்து, அவை மறுபடியும் விலகிவிடாமல் இருக்க, உலோக ஸ்குரூக்களை எலும்புகளில் பொருத்தி நிலை நிறுத்தினால்தான் வலி பூரணமாகக் குணமாகும். அவர் கர்ப்பமடையும் போதும் பிரசவத்தின்போதும் இந்த வலி வராது’ என முடிவு செய்த எலும்பு மருத்துவர் அப்படியே செய்தார். அதன் பிறகு இனியா எவ்வித சிரமமும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார்.

இனியாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மருத்துவ மொழியில் ‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்’ (Spondylolisthesis) என்று பெயர். பிறவிக்கோளாறு, விபத்து, அடிபடுதல், அழற்சி போன்றவை காரணமாகவும், அதிக சுமை தூக்குவது, கடுமையான ஜிம் பயிற்சிகள்/எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் முதுகெலும்பு விலகிவிடும். முக்கியமாக, லம்பார் பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்ததுபோல் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க வேண்டிய எலும்புகள், கோபித்துக்கொள்ளும் குழந்தை அம்மாவின் பிடியிலிருந்து  நழுவி ஓடுவதுபோல் பக்கவாட்டிலோ, முன்புறமோ நழுவிவிடும். ஏற்கனவே சொன்னதுபோல் இதிலும் தண்டுவட நரம்புகள் அழுத்தப்பட்டு முதுகுவலி, கால்வலி கடுமையாகும். இதற்கும் அறுவை சிகிச்சைதான் உதவும்.

கீழ்முதுகில் வலி என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுவிட்டால் சாதாரண சிகிச்சைகளில் குணப்படுத்திவிடலாம்; பெரும்பாலும் ஆபரேஷன் தேவைப்படாது. வீட்டுப்பக்குவம், நாட்டு வைத்தியம், மாற்று மருத்துவம், ஆயுர்வேத மசாஜ் போன்றவற்றில் சிலருக்கு வலி குறையலாம்; ஆனால் வலி மறுபடியும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அப்போது ஆபரேஷனைத் தவிர்க்க முடியாது. எனவே, முதுகுவலிக்கான தீர்வு நம் கையில்தான் உள்ளது.


பெட்டிச் செய்தி:               

முதுகுவலியைத் தடுக்க 10 கட்டளைகள்!


1. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதையும், அடிக்கடி குனிந்து எழுந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும். 

2. நாற்காலியில் உட்காரும்போது கால் மீது கால் போட்டு உட்காரக்கூடாது. 

3. முதுகுவலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கக் கூடாது. இவர்கள் தரையிலோ, பெஞ்சிலோதான் படுக்க வேண்டும் என்பதில்லை; சரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம். 

4. சுமையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்ள வேண்டும். 

5. நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே தரையைச் சுத்தம் செய்யவும். 

6. மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தவும். 

7. உயரமான செருப்புகள் அணிவது ஆகாது.

8. மோசமான சாலைகளில் இருச்சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.  

9. உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். 

10. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி அவசியம். 


                                                                                                30.12. 2018 காமதேனு இதழ்.

===============================================================================================================



கட்டுரையாளர்: டாக்டர் கு. கணேசன்,

பொதுநல மருத்துவர்,

 தொடர்புக்கு : gganesan95@gmail.com

 


 முகவரி:

Dr.G.Ganesan, MBBS.,

Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,

RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT

Mobile: 99524 34190

e-mail: gganesan95@gmail.com

 

 



















Comments

  1. முதுகுவலி ஏற்பட முக்கியமான இரு காரணங்கள்
    முதுகெலும்பு இடைச் சவ்வு விலகுவதும் (Disc prolapse) வீக்கம் (Disc bulge) என விளக்கி பின்
    இந்தப் பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலம் எளிதாக சரிசெய்ய இயலும் எனவும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்ற விளக்கமும் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது.

    துரதிருஷ்டவசமாக டாக்டர் கு கணேசன் அவர்களே இந்த வலியில் பாதிக்கப்பட்டு
    ஒரு மாதம் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நலம் அடைந்தார் என்பது வாசகர்களுக்கு பயத்தை போக்குகின்ற அருமருந்தாக உள்ளது.

    ReplyDelete
  2. முதுகுவலியால் அவதிப்படும் எனக்கு ஏன் ஏற்படுகிறது என்ற காரணங்கள் அரைகுறையாக தெரிந்திருந்த நிலையில் உங்கள் பதிவின் மூலம் முழுவதும் புரிந்துவிட்டது மிகுந்த அன்பில் நன்றி.

    2 அல்லது 3 மாதங்களுக்கு ஓரிரு முறை நீங்கள் குறிப்பிட்டது போல் காலில் முழங்காலுக்கு கீழ் தொடையில் மின்சாரம் பாய்வது போல் சொல்லமுடியாத அளவுக்கு கடுமையான வலி இருக்கும் அப்போது அந்த பகுதி கல்போல் இறுகிவிடும் உடனே அந்த இடத்தில் குத்தோ குத்து என்று குத்தி களைத்து விடுவேன் எல்லாமே ஒருநிமிடம் தான் ஆனால் அந்த வலி உணர்வு ஒருவாரம் வரை இருக்கும்.

    இந்த முதுகுவலி விருந்துக்கு வந்தது போகாமல் கடந்த 15 வருடங்களாக தங்கி உள்ளது தேங்காய் எண்ணை அல்லது ருமாட்டிகோ என்ற மூலிகை தைலம்தான் எனக்கு நிவாரணி அதிக வலி ஏற்பட்டால் கூடுதலாக வெண்ணீர் ஒத்தடம் அவ்வளவுதான்.

    எப்போது குறைந்தது ஒரு மாதகாலம் உடற்பயிற்ச்சியோ அல்லது நடை ஓட்டம் என ‌30 நிமிடம் செய்யாமல் இருக்கிறேனோ அப்போதுதான் முதுகுவலி வருகிறது. வலி வந்தபின்னரும் கூடுதலாக 10 நாட்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் அந்த நாட்களில் திரும்பி, புரண்டு படுப்பதுகூட போராட்டமாகத்தான் இருக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்தால் எந்தவலியும், எப்போதும் எனக்கு வருவதில்லை அப்போது இந்த 51 வயதிலும் 10 கிமீ கூட எளிதாக ஓடும் பலம் இருக்கும், மனமும் துள்ளும், சந்தோசத்தில் ஆனந்தகூத்தாடும்.👍 அன்புடன் மீண்டும் நன்றி.

    ReplyDelete
  3. அருமையான ,பயனுள்ள கட்டுரை.வாழ்த்துக்கள் மாமா.

    ReplyDelete
  4. படுத்து உறங்கி எழும்போதும்... கிரிக்கெட் விளையாடும்போதும் எனக்கு பயங்கரமாக முதுகு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது... வீட்டில் இருந்தால் மனைவியை முதுகின் மேல் ஏறி மிதிக்க சொல்வேன்... கொஞ்சம் இதமாக இருக்கும்... இதற்கு காரணம் என்ன? எப்படி சரி செய்ய?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!