கொரோனாவில் மீண்டவர்களுக்கு 6 கட்டளைகள்

 



கொரோனாவில் மீண்டவர்களுக்கு 6 கட்டளைகள்


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல், கொரோனா தொற்றாளர்களுக்குப் பலதரப்பட்ட உடல்நல பாதிப்புகள் நீண்ட காலம் தொடர்கின்றன0 (Post covid) என்றும், மறுதொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சிகள் அச்சுறுத்துகின்றன. 

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ‘தங்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது’ என்று அலட்சியமாக இருக்காமல், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கையாள வேண்டியதும் அவசியமாகிறது. அவற்றோடு கீழ்க்காணும் 6 மருத்துவக் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமாகிறது.

1. பிரச்னைகள் அறிவோம்!

கொரோனா வந்து குணமானவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் அடுத்த 3 மாதங்கள் வரை ‘முன்புபோல் உடல் இல்லை’ என்கின்றனர். இவர்களுக்கு இருமலும் மூச்சுத்திணறலும், அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளாக மாறுகின்றன. உடல் எப்போதும் களைப்பாக இருக்கிறது. பசி குறைகிறது. செரிமானம் சரியில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி, மூட்டுவலி குடைகிறது. கவனக்குறைவு, மனக்குழப்பம், மறதி, மனப்பதற்றம், படபடப்பு ஏற்படுகின்றன. அவ்வப்போது லேசான காய்ச்சலும் சருமத்தில் அரிப்பும் தடிப்புகளும் உண்டாகின்றன. வாசனை தெரிவதில்லை. உறக்கம் வருவதில்லை. கால் விரல் பகுதிகளில் ரத்தம் கட்டுகிறது. ரத்த உறைவு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகளும் எழுகின்றன. இதுவரை இல்லாமல் புதிதாக சிலருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் துளிர்விடுகின்றன. பக்கவாதமும் மாரடைப்பும் எட்டிப் பார்க்கின்றன. 

2. மறுபரிசோதனை அவசியம்

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசோதனைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மீண்டும் ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் சிடி ஸ்கேன், இசிஜி, எக்கோ எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் கொரோனா கொடுத்த நோயின் தாக்கம் நாட்படுவதைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, இதயத்தைக் காக்க முடியும். மூளையையும் அதோடு தொடர்புடைய நரம்புகளையும் பாதுகாக்க முடியும். ஒருமுறை மீண்டுவந்த உயிராபத்தை மறுபடியும் தடுக்க முடியும்.

3. தேவை மூச்சுப் பயிற்சிகள்

பொதுவாக, கொரோனா கிருமி நுரையீரலைத்தான் அதிகம் பாதிக்கிறது. தொடர் இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்றவர்களுக்கு நுரையீரலில் ‘ஃபைப்ரோசிஸ்’ (Fibrosis) எனப்படும் ‘நாரழற்சி’ ஏற்படுகிறது. எப்படியெனில், காற்றுப் பரிமாற்றம் சரியாக நிகழ நுரையீரல் திசுக்கள் முறையாக சுருங்கி விரிய வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பாளர்களுக்கு மென்மையான திசுக்கள் இருக்க வேண்டிய இடத்தில், இறுகிப்போன நார்த்திசுக்கள் இடம் பிடிக்கின்றன. இவற்றுக்கு சுருங்கி விரியும் தன்மை இல்லை. ஆகவே இவை இருக்கும் நுரையீரலுக்குள் காற்று நுழைய வழியில்லை. ஒட்டுப்போட்ட கார் டயருக்கு வேகம் குறைவுதானே! அதுபோல் நாரழற்சி ஏற்பட்ட நுரையீரல் பகுதிக்கு சுவாசம் குறைவதுண்டு. இதனால் இவர்களுக்கு இருமலோ, மூச்சுத்திணறலோ நீடிப்பது உண்டு. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட இவர்கள் மூச்சுப்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம். 


மூச்சுப்பயிற்சிகளில் பிராணாயாமம் முக்கியமானது. இதை முறையாகப் பயின்று தினமும் காலை, மாலை தலா 15 நிமிடம் மேற்கொண்டால், பாதிப்புக்குள்ளான நுரையீரல்கள் விரியத் தொடங்கும்; அவை கூடுதலாகக் காற்றைப் பெற்றுக்கொள்ள வழி பிறக்கும். அப்போது இருமல் கட்டுப்படும்; மூச்சுத்திணறல் விடை பெறும். 

இப்படியும் செய்யலாம்….பலூனில் காற்றை ஊதி பயிற்சி செய்யலாம். ஸ்பைரோமீட்டர் கருவி மூலமும் காற்றை ஊதிப் பார்க்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்கு இவற்றை மேற்கொள்ள வேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் விரலை வைத்துப் பார்க்கும்போது ஆக்ஸிஜன் அளவு 95%க்கும் குறையாமல் இருக்க வேண்டும். 

4. நடைப்பயிற்சி நல்லது

கொரோனா தொற்றாளர்கள் நோயிலிருந்து மீண்டுவந்தவுடன் முன்புபோல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட முடியாது. காரணம், இவர்களுக்கு நுரையீரல் மட்டுமன்றி இதயமும் பாதிப்புக்கு உள்ளாவதுதான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல கொரோனா நேரடியாக இதயத்தைத் தாக்கி அழற்சியை உண்டாக்குவது ஒருபுறம் என்றால், பாதிப்புக்குள்ளான நுரையீரலிலிருந்து போதுமான ரத்தமும் ஆக்ஸிஜனும் கிடைக்காமல் இதயம் அவதிப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடலில் கொரோனா தொற்று மறைந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் இதயத்தின் செயல் திறன் குறைகிறது. 

இந்த நிலைமையை நீடிக்க விடுவது நல்லதில்லை. ஆகவே, ஆக்ஸிஜன் சிகிச்சையில் இருந்த கொரோனா தொற்றாளர்கள் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம். நடைப்பயிற்சியை ‘இரண்டாவது இதயம்’ என்று கூறுவார்கள். இதன் பலனால், இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். அப்போது இதயத்துக்குச் சுமை குறையும். இரவு நேர இருமல், மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சுவலி போன்ற தொல்லைகள் அடங்கும். உடலில் பழைய உற்சாகம் ஊற்றெடுக்கும். 


நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிய வேண்டாம். இந்தப் பயிற்சிகளுக்குத் தனி நபராகச் செல்வது நல்லது. நண்பர்களுடன் கூட்டமாகச் சென்றால் தனி மனித இடைவெளி காக்க வேண்டியது முக்கியம். தூசும் மாசும் உள்ள இடங்களில் நடைப்பயிற்சி செய்யக்கூடாது.

5. ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கியம் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் ‘உடல் சக்தி இல்லாமல் இருக்கிறது’ என்கின்றனர். இந்தக் குறையை ஈடுகட்ட புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகரிக்க வேண்டும். காலை டிபனுக்கு இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, பருப்பு சாம்பார், சட்னி சாப்பிடுங்கள். தினமும் அரை லிட்டர் பால் குடியுங்கள். 2 முட்டை சாப்பிடுங்கள். மதிய உணவில் அரிசிச் சோற்றுடன் பாசிப்பருப்பு சாம்பார், தயிர். தினமும் இரண்டு வகை காய்களும் ஒரு பழமும் அவசியம். மாலையில் பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, காய்கறி சூப் அல்லது மட்டன் சூப். மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். இடைவேளை உணவாக மஞ்சள் பால், மிளகுப் பால் அல்லது சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது நல்லது. காபி, மது, புகைப்பழக்கம் வேண்டாம். இரவு டிபனுக்கு சப்பாத்தியும் காய்கறி குருமாவும். இவை எல்லாமே கொரோனா தொற்றாளர்களுக்கு உடலில் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கொரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

6. மன அமைதி காக்க…

கொரோனாவின் தாக்கம் மறைமுகமாக மனதையும் பாதிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்ட கவலை, நோய் குறித்த அச்சம் போன்றவை ஒருபுறம் என்றால், சிகிச்சையின்போது தனிமை, பணம் இழப்பு, பணி இழப்பு, சமூக விலகல், வருமானம் குறைந்ததால் எதிர்காலம் பற்றிய கவலை போன்றவையும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான சோகம் மிகுந்த மனநிலை நோய் எதிர்ப்பாற்றலை இன்னும் குறைத்துவிடும். இதனால் இவர்கள் எப்போதும் உள்ளம் சோர்ந்தும், உடல் சோர்ந்தும் காணப்படுகின்றனர். அடிக்கடி கோபப்படுகின்றனர். சில மாதங்கள் கழித்துத்தான் அந்த நிலையிலிருந்து மாறி இயல்புக்குத் திரும்புகின்றனர். 

அந்த நிலைமை நீடிக்காமல் இருக்க, இவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதுமே தனிமை உணர்விலிருந்தும் விலகிவிட வேண்டும். தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சமூகத்துடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன், உறவினருடன், நண்பர்களுடன் உரையாடுவது, புத்தகம் வாசிப்பது, பிடித்த இசை கேட்பது ஆகியவை மனச்சோர்வுக்கு மருந்தாகும். பால் தயிராக வேண்டுமானால் உறை மோர் அவசியம். அதுபோல் மன அழுத்தம் மறைய ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதற்கு யோகா, தியானம் உள்ளிட்ட மன அமைதிப் பயிற்சிகள் உதவும். 

இறுதியாக, கடுமையான கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்ததுபோல் ஊரடங்கில் தாழ்ந்துபோன வாழ்வாதாரத்தையும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கைகொள்வது எல்லாவற்றையும்விட முக்கியம்.                                                                                             

19.10.2020 தினமலர் மதுரை பதிப்பு.

முகவரி:

Dr.G.Ganesan, MBBS., Ganesh Hospital, 53/19-A, Angiah Raja Street, RAJAPALAYAM-626 117  VIRUDHUNAGAR – DT  Mobile: 99524 34190            e-mail: gganesan95@gmail.com




Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?