அலறி ஓடும் ஆஸ்துமா!

  

    

மழைக்காலம் சிறப்புக் கட்டுரை


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.



                                         அலறி ஓடும் ஆஸ்துமா!

 சுத்தம் சுகம் தரும்’. இதுதான் ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தாரக மந்திரம். வீடு, அலுவலகம், தெரு, சூழல்…..எங்கும் எதிலும் சுத்தம் அவசியம். இவர்களுக்குத் தூசும் மாசும் ஆயுளுக்கும் ஆகாது. வீட்டில்/அலுவலகத்தில் தேவையில்லாமல் பொருட்களைச் சேரவிடக்கூடாது. உதாரணமாக, சுவர்களில் படங்களைத் தொங்கப்போட்டால் ஒட்டடை சேரும். ஒட்டடை இவர்களுக்குப் பரம விரோதி.

படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். அப்போதுதான் உண்ணிகளுக்கு அங்கே இடமில்லாமல் போகும். ஆஸ்துமாக்காரர்கள் கம்பளியைப் பயன்படுத்தக்கூடாது; சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக்கூடாது. ‘சில்’லென்ற காற்று நேரடியாக அறைக்குள் நுழையக்கூடாது.

வாசனை திரவியங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் ரசாயனங்கள், ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவிரட்டி… இப்படி எதையும் பயன்படுத்தக்கூடாது. ஒட்டடை எடுப்பது, வெள்ளை அடிப்பது, வர்ணம் பூசுவது போன்றவற்றை ஆஸ்துமாக்காரர்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.

ஆஸ்துமாக்காரர்கள் வீட்டில் பூச்செடிகள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மண்ணுளிப் பாம்பை மடியில் கட்டிக்கொள்வதற்குச் சமம். அதுபோல் தூசு உள்ள இடங்களில் வேலை செய்வதும், மாசு மிகுந்த இடங்களுக்குச் செல்வதும் தேன்கூடு எனத் தெரிந்தே அதன்மேல் கை வைப்பதற்கு ஒப்பாகும். தவிர்க்க முடியாதவர்கள் அந்த இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். பனிக்காலத்தில் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்ள வேண்டும்.

உணவில் கவனம்!

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கும் பெரும்பங்கு உண்டு. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு எந்த உணவில் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கவனித்து, அதைத் தவிர்த்தால் ஆஸ்துமா வருவதையும் தடுக்கலாம். சுருங்கச் சொன்னால், நம் பாரம்பரிய வீட்டு உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும், துரித உணவுகளுக்கு/வெளி உணவுகளுக்கு விடை கொடுப்பதும் ஆஸ்துமாவை விரட்ட உதவும். உடற்பருமன் ஆஸ்துமாவுக்குப் படிகட்டும். எனவே, உடல் எடையைப் பேண வேண்டியதும் முக்கியம்.

கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் ஊற்றக்கூடாது. அதுபோல் இவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது/குடிக்கக்கூடாது. வெதுவெதுப்பான குடிநீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி சீக்கிரத்தில் வெளியேறிவிடும். இப்படிப் பல வழிகளில் ஆஸ்துமா எனும் ஆக்ரோஷத் தீயை அணைக்க முடியும்.

புகை – பெரும் பகை!

ஆஸ்துமா உள்ளவர்களுக்குப் புகைதான் பெரும் பகை. அமிலத்தைக் குடித்தால் அது கழுத்தை நெரிப்பதுபோல் புகைபிடித்தால் அதிலுள்ள நிகோடின் மூச்சுக்குழாய்களை நெரித்துவிடும். அப்போது ஆஸ்துமா ஆவேசப்படும். ஆகவே, புகைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அதுபோல் இவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ ஆஸ்துமாவுக்கு முகூர்த்தக்கால் ஊன்றும். தடுமத்தைத் தடுப்பதும் இன்ஃபுளூயென்சா, நிமோனியா நோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஆஸ்துமாவுக்கு ஆப்புவைக்கும்.

மனக்கவலையை மாற்ற….

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு மோசமோ அந்த அளவுக்குக் களைப்பும் கவலையும் சேர்ந்துகொண்டால், ஆஸ்துமா மோசமாகிவிடும். ஆகையால் களைப்படையாமல் இருப்பதற்கும் கவலையை மறப்பதற்கும் வழிதேட வேண்டும். முக்கியமாக, வேலை முடிந்ததும் ஓய்வெடுக்க வேண்டும். தினமும் தியானம் செய்வதும் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் நல்லது.

மூச்சுப்பயிற்சிகள் முக்கியம்!

ஆஸ்துமா உள்ளவர்கள் உடற்பயிற்சிகளை அதிகம் செய்யக்கூடாது. சில உடற்பயிற்சிகளே ஆஸ்துமாவை வரவழைக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். பதிலாக யோகாசனம் செய்யலாம். காலையில் எழுந்ததும் மூச்சுப்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆஸ்துமா அலறி ஓடும். மூச்சுப்பயிற்சிகளில் பலவிதம் உண்டு; முக்கியமானது, பிராணாயாமம். அடுத்தது, ஸ்பைரோமீட்டர் பயிற்சி. மற்றவை: 10 நிமிடங்களுக்குக் காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சி. பெரிய ரப்பர் பலூனை ஊதும் பயிற்சி. ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதும் பயிற்சி. இவற்றில் ஒன்றை தினமும் 2 வேளை செய்ய வேண்டும். இவை எல்லாமே சுருங்கிப்போன மூச்சுக்குழாய்களை விரியச் செய்கின்றன; மூச்சு வெளியேறும் வேகத்தைக் கூட்டுகின்றன; முடுக்கிவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைபோல் நுரையீரல் இரண்டும் புதுப்பாய்ச்சல் பெறுகின்றன. அதைப் பார்த்து ஆஸ்துமாவும் இளைப்பும் மிரண்டு ஓடுகின்றன.

என்ன சிகிச்சை?

மூச்சுக்குழாயை விரியச்செய்வது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, சுவாசப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது என ஆஸ்துமாவுக்கு நிறைய மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை எடுத்துக்கொண்டால் அங்குசத்துக்கு அடங்கும் யானைபோல் ஆஸ்துமாவும் அடங்கிவிடும். ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் ‘எதற்கு ஒவ்வாமை ஏற்படுகிறது?’ எனக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ‘இமுனோதெரபி’ என்று பெயர்.

ஆபத்பாந்தவன் இன்ஹேலர்!

‘இன்ஹேலர்’ இவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம். ஆனால், அதைப் பயன்படுத்தத்தான் பலரும் பயப்படுகின்றனர். அதை எடுக்க ஆரம்பித்தால், ஆயுள் முழுவதும் தேவைப்படுமே என்று ‘தேவையில்லாமல்’ பதறுகின்றனர். கைபேசியில் கிடைக்கிற பலன் தொலைபேசியில் கிடைக்காததுபோல் இன்ஹேலரில் கிடைக்கிற பலன் மாத்திரைகளில் கிடைக்காது. எப்படி?

ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதற்குப் பிறகுதான் அவை இளைப்பைக் கட்டுப்படுத்தும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். மேலும், இந்த மருந்துகளுக்குப் பக்கவிளைவுகளும் உண்டு. விரல் நடுக்கம், படபடப்பு இதற்குச் சில உதாரணங்கள்.

ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுத்திணறலை உடனே கட்டுப்படுத்தும். இதிலுள்ள மருந்தின் அளவு மிகவும் குறைவு. உடலுக்குள் வேறு எந்த இடத்துக்கும் இந்த மருந்து செல்வதில்லை. இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகளும் இல்லை. ஆகவே, ஆஸ்துமாக்காரர்களுக்கு ‘இன்ஹேலர்’தான் ஆபத்பாந்தவன்!

இன்ஹேலர் வகைகள்

சமீபத்தில் ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். அவர் கையில் ஒரு இன்ஹேலரை வைத்திருந்தார். “இந்த ‘டப்பா’வைப் பத்து மாசமா உறிஞ்சுறேன், டாக்டர். பிரயோஜனமே இல்லை!” என்றார்.

“இதை எந்த மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரை செய்தார்?” எனக் கேட்டேன். “மருத்துவர் இல்லை! என் மகன்!” என்றார். “அவர் என்ன செய்கிறார்?” எனக் கேட்க, “மிலிட்ரி ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர். அங்கிருந்து இதை அனுப்பிவைத்தான்” என்றார்.

“யார் வேண்டுமானாலும் பரிந்துரை செய்வதற்கு இன்ஹேலர் ஒரு பரிசுப்பொருள் இல்லை, பெரியவரே! இது ஒரு மருந்துப்பொருள். எந்த இன்ஹேலரை, எப்போது, எந்த அளவில், யார் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். இன்ஹேலரில் முக்கியமாக இரண்டு வகை உண்டு. ஆஸ்துமா தீவிரமடையும்போது உபயோகிப்பது ஒரு வகை. ‘ரிலீவர்’ என்று இதற்குப் பெயர். ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ‘கன்ட்ரோலர்’ அடுத்த வகை. இதைத் தினமும் 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவை இந்த இரண்டும். நீங்கள் உபயோகிப்பது இரண்டாம் வகை மட்டுமே. ஒருவழிச் சாலையில் சென்றால் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வரத் தாமதமாகும். இரட்டைவழிச் சாலையில் சென்றால் சீக்கிரத்தில் திரும்பிவிடலாம். நீங்கள் ஒருவழிச் சாலையில் செல்வதால் பலன் கிடைக்கத் தாமதமாகிறது” என்று விளக்கம் சொல்லி, சரியான இன்ஹேலர்களைக் கொடுத்தனுப்பினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஆஸ்துமா குறைந்துவிட்டதாகச் சொல்லியனுப்பினார்.

 


இறுதியாக இதையும் சொல்லிவிடுகிறேன். ஆஸ்துமாக்காரர்களில் 3 வகை உண்டு. முறையாகச் சிகிச்சை எடுத்து எவ்விதத் தொந்தரவும் இல்லாதவர்கள் முதல் வகையினர். தொற்று பாதிப்பின்போது அல்லது பருவநிலை மாறும்போது மட்டும் ஆஸ்துமா தொல்லை கொடுப்பது இரண்டாம் வகையினர். இரவு மற்றும் அதிகாலையில் ஆஸ்துமா அதிகமாகப் பிரச்சினை செய்வது மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள். இந்த நிலைமைகளுக்கு ஏற்றவாறுதான் இன்ஹேலர்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அவற்றைப் பயனாளிகள் சரியான நேரத்தில், சரியான அளவில், முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆஸ்துமாவின் பிடியிலிருந்து சுலபத்தில் விடுபட முடியும்.

பெட்டிச் செய்தி :                                ஆஸ்துமாவுக்கு நவீன சிகிச்சை!


‘ஆஸ்துமா தெர்மோபிளாஸ்டி’ (Asthma Thermoplasty). இது ஆஸ்துமாக்காரர்களுக்குத் தரப்படுகிற நவீன சிகிச்சை. கணினியுடன் இணைக்கப்பட்ட ‘பிராங்கோஸ்கோப்பி’ உதவியுடன் இது மேற்கொள்ளப்படுகிறது. இதன் உள்முனையில் கேமராவும் மின்விளக்கும் உள்ளன. மருத்துவர் இதன் வெளிமுனையிலிருந்து நேரடியாகவும் கணினித் திரையிலும் காட்சிகளைப் பார்த்து சிகிச்சை தருகிறார். சிகிச்சையின்போது இந்தக் கருவியை வாய் வழியாக நுரையீரலுக்குள் அனுப்புகிறார். மூச்சுக்குழாயை அடைந்ததும், கருவியின் உள்முனையில் சுருங்கிய நிலையிலிருக்கும் பலூன் அமைப்பைப் பாராசூட்டை விரிப்பதுபோல் விரிக்கிறார். அங்கு சுருங்கி இருக்கிற மூச்சுக்குழாய் இதனால் விரிகிறது. அப்போது ரேடியோ ஃபிரிகுவன்ஸி அலைகளை 10 நொடிகளுக்குச் செலுத்துகிறார். இவை 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உண்டாக்கி அங்கு அடைத்துக் கொண்டிருக்கும் மென்தசைகளைக் கரைத்துவிடுகிறது; மூச்சுக்குழாய் அடைப்பு முழுவதுமாக நீங்கிவிடுகிறது. மூன்று வார இடைவெளியில் மொத்தம் மூன்று முறை இப்படிச் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் குறைந்தது 5 வருடங்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதில்லை. இந்தச் சிகிச்சையை வெளிநோயாளியாகவே மேற்கொள்ளலாம். ஆனால், இது எல்லோருக்கும் ஏற்றதல்ல! சில நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். 

16.12.2018 காமதேனு வார இதழ்.

டாக்டர் கு. கணேசன் MBBS.

நான் யார்?

பொதுநல மருத்துவன். மருத்துவ அறிவியல் எழுத்தாளர். இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘கணேஷ் மருத்துவமனை’யை நடத்தி வருகிறேன். மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், குமுதம், குங்குமம், கல்கி, ஹெல்த் & பியூட்டி, டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், குமுதம் ஹெல்த், கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்பு. தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதான ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித்துறையின் விருது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ‘மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப்பேராய விருது’, சென்னை, முத்து பார்மஸியின் ‘சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின் ‘தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன். பாரதிப் பணிச் செல்வர், மருத்துவ இலக்கிய மாமணி எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

மனைவி லலிதா. மகன் டாக்டர் க. திவாகர், (Intensivist, ஜெம் மருத்துவமனை, கோவை). மருமகள் டாக்டர் பௌசியா. பேத்தி தியா. மகள் டாக்டர் க. ஆர்த்தி.

முகவரி:

·         Dr. G. Ganesan, MBBS.,               Ganesh Hospital,

·         53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

·         VIRUDHUNAGAR – DT             Mobile: 99524 34190      

·         e-mail: gganesan95@gmail.com

·         வலை தளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?