முதுகுவலி! ஏன்? எதற்கு? எப்படி?

    


                                              முதுகுவலி! ஏன்? எதற்கு? எப்படி?



                                            டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


மென்பொருள் நிறுவனத்தில் அவர் ஓர் இளைய அதிகாரி. “குனிய முடியவில்லை. நிமிர முடியவில்லை. முதுகுவலி கொல்கிறது’ என்று, மனைவியின் துணையோடு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். “மூச்சுப் பிடிப்பாக இருக்கும் என்று சில வீட்டுப் பக்குவங்களைச் செய்து பார்த்தேன். வலிவிட்டபாடில்லை. ஒரு மாதமாக வலி வருகிறது” என்றும் கூறினார்.

முறையான பரிசோதனைக்குப் பிறகு, “உங்களுக்கு முதுகெலும்பில் பிரச்சினை உள்ளது; சவ்வு வீங்கியிருக்கிறது” என்று சொன்னேன். ‘அதெல்லாம் வயதானவர்களுக்குத்தானே! இந்த வயதிலுமா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டனர் அந்தத் தம்பதியினர்.

“முதியவர்களுக்கு மட்டுமே முதுகுவலி வந்த காலம் முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் பத்து வயது பாலகனையும் அது படுத்துகிறது” என்று சொல்லி, இன்றைய வாழ்க்கைமுறைகளுக்கும் முதுகுவலிக்கும் உள்ள தொடர்பைப் புரியவைத்தேன். அதற்குப் பிறகுதான் அவர்கள் சிகிச்சைக்கே சம்மதித்தனர். 

Human nervous system - The spinal cord | Britannica

முதுகுச் சங்கிலி தெரியுமா?

நம்மால் நேராகப் பார்க்க முடியாத ஒரே இடம் நம் முதுகு. நாம் அதிகம் அலட்சியப்படுத்தும் இடமும் அதுதான். கழுத்துக்குக் கீழே பரந்து விரிந்த முதுகில் மேல்முதுகு, கீழ்முதுகு என இரண்டு பகுதிகள் உண்டு. அங்கே ஓர் அச்சாணிபோல் அமைந்திருக்கிறது முதுகெலும்பு.

‘முதுகெலும்பு’ என்று நாம் ஒருமையில் அழைத்தாலும் அது ஒரே எலும்பால் ஆனதல்ல. கழுத்திலிருந்து இடுப்புவரை 33 எலும்புக் கண்ணிகளால் ஆன முதுகுச் சங்கிலி அது. 12 எலும்புகள் ஒன்றோடொன்று கோக்கப்பட்டு சற்று பின்புறமாக வளைந்துள்ளது மேல்முதுகெலும்பு. ஐந்து எலும்புகள் கோக்கப்பட்டு சற்று முன்புறமாக வளைந்துள்ளது கீழ்முதுகெலும்பு. இடுப்புக் கட்டுக்கும் மார்புக் கூட்டுக்கும் நடுவில் உள்ள ‘லம்பார்’ (Lumbar) எனப்படும் அந்தக் கீழ்முதுகுதான் நம் கட்டுரையின் கதாநாயகர்.

முதுகெலும்பைக் கூர்ந்து கவனித்தால் ஏறக்குறைய ஆங்கில எழுத்து ‘S’ மாதிரி அது வளைந்திருக்கும். சாலை வளைவுகளில் வாகனங்கள் சுலபமாகத் திரும்புவதற்குச் சாய்ந்த மேடான திருப்பங்கள் தேவைப்படுவதுபோல் முதுகெலும்பு சிரமமில்லாமல் இயங்குவதற்கு இந்த வளைவுகள் அவசியம்.

முன்னால் குனிகிறோம். பின்னால் சாய்கிறோம். பல திசைகளில் பறந்து வரும் டென்னிஸ் பந்தைத் துல்லியமாகத் தடுத்து விளையாடுகிறோம். இசைக்கு ஏற்ப இடுப்பை அசைத்தும் ஒடித்தும் ‘டிஸ்கோ’ ஆடுகிறோம். இப்படிப் பலதும் நம்மால் சுலபமாகச் செய்ய முடிகிறது என்றால் அதற்கு லம்பார் எலும்புகள் கொடுக்கும் அபார ஒத்துழைப்புதான் முக்கியக் காரணம். ஆனால் கறவை மாட்டை மழை, வெயிலில் கட்டிப்போடுவதுபோல் நம் அசைவுகளுக்கு ஆதரவாக இருக்கும் லம்பார் எலும்புகளுக்கு நாம் பலவாறு வஞ்சகம் செய்கிறோம்.

தேன்கூட்டைக் கலைத்தால் தேனீக்கள் நம்மைக் கொட்டத்தான் செய்யும். லம்பார் எலும்புகளுடன் வம்பு செய்தால் அவை நம்மை எதிர்க்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்புக்குப் பெயர்தான் ‘கீழ்முதுகு வலி’ (Low back pain).

வலிக்கு என்ன காரணம்?

பல காரணங்கள். முதுகைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநார்கள், இடைச் சவ்வு (Inter Vertebral Disc) ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவது கீழ்முதுகு வலிக்கு முக்கியமான காரணம். இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் முதுகுவலியின் முகாந்திரம் முழுசாகப் புரியும்.

கீழ்முதுகு உடலின் மேல்பகுதி எடையைத் தாங்கும் கடமையில் உள்ளது. ஆனாலும், உடலில் முக்கியப் பகுதிகளுக்கு உள்ள ‘ராணுவப் பாதுகாப்பு’ இதற்குக் கிடையாது. இதைச் சுற்றி பூசினாற்போலுள்ள சில தசைகளே இதன் பலம். இதற்கு அதிக சுமை ஆகாது; சுமை கூடினால் நமக்குச் சுகம் கிடைக்காது. உதாரணத்துக்கு, “எப்பவும் இரண்டு குடம் தண்ணியை இடுப்பில் தூக்குவேன். தண்ணிக் கஷ்டத்துல தலையில் ஒரு குடம் அதிகமா தூக்கிட்டேன். முதுகு பிடிச்சிக்கிடிச்சி” என்று புலம்பும் பெண்கள் இன்று அதிகம். அதுபோல் பழக்கம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக சுமை தூக்குவதும் அதிக எடையுள்ள பொருட்களைத் தவறான நிலையிலிருந்து இழுப்பதும்/தள்ளுவதும் சகஜம். பலரும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் நின்று, குனிந்து, கூன்போட்டு வேலை செய்வதுண்டு. அப்போதெல்லாம் முதுகுவலியால் அவதிப்படுவதுண்டு. இவ்வளவு ஏன்? முதுகில் மூட்டை சுமப்பதுபோல் புத்தகப் பையைச் சுமக்கின்றனர் இன்றைய பள்ளிக் குழந்தைகள். விளைவு, சிறு வயதிலேயே தோள்பட்டை வலி, முதுகுவலி எனச் சிரமப்படுகின்றனர்.

வீட்டிலும் வயக்காட்டிலும் தோட்டந்துரவுகளிலும் எவ்வளவோ கடினமாக வேலைகள் செய்தபோதெல்லாம் முதுகுவலி அவ்வளவாக இல்லை. காரணம், அந்த வேலைகளில் உடல் அசைவுகள் அதிகம். அவை பயிற்சிகள்போல் செயல்பட்டன. உடல் தசைகள் வலுப்பெற்றன. அவை முதுகில் அழுத்தம் கொடுக்கவே இல்லை. அலுவலக வேலை அப்படியில்லை. கணினியும் கைபேசியும் நம்மை ‘ஆள’ வந்த பிறகு அமர்ந்தே செய்யும் வேலைகள் அதிகரித்துவிட்டன. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ வேலை செய்யும்போது கீழ்முதுகில் கயிறு கட்டியதுபோல் அழுத்தம் அதிகரிக்கிறது; தசை இயக்கம் குறைகிறது; தசைநார் இறுகுகிறது. இடைச் சவ்வு நசுங்குகிறது. இயல்பாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு இரட்டைச் சுமை ஆகிறது. இதனால், இடைச் சவ்வு வீங்கிவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது. அப்போது லம்பார் பகுதி முதுகுவலிக்கு அச்சாரம் கொடுக்கிறது.

சைக்கிள் மிதித்துப் பயணம் செய்த முந்தைய தலைமுறை தாத்தாக்களுக்கு முதுகுவலி இல்லை; மோட்டார் வாகனங்களில் சொகுசாகப் பயணம் செய்யும் இன்றைய தலைமுறைக்கு இளம் வயதிலேயே முதுகுவலி. என்ன காரணம்?

இருசக்கரமோ, நான்கு சக்கரமோ வெளிநாட்டு வாகனங்களை ஆசையாக வாங்கிவிடுகிறோம். ஆனால் அங்கே உள்ள சாலை வசதிகள் இங்கே உண்டா என்பதை யோசிக்க மறுக்கிறோம். வெளிநாடுகளில் வேகக் கட்டுப்பாடு உண்டு; வேகத் தடைகள் இல்லை. ஆனால் இங்கோ வேகத்தடை இல்லாத சாலையுமில்லை; குண்டுகுழி இல்லாத பாதையுமில்லை. பொருத்தமில்லாத சட்டை போட்டால் பார்க்க சகிக்காது. அதுமாதிரி பொருத்தமில்லாத பாதைகளில் பயணித்தால் இடைச் சவ்வுக்குப் பிடிக்காது. அது ‘விலகி’ ஓடும். அப்போது முதுகுவலி வந்து சேரும்.

பொருத்தமில்லாத இருக்கையும் உட்காரும் நிலையும் கீழ்முதுகு வலிக்குக் காரணமாகலாம். சிலர் கூன் விழுந்த நிலையில் உட்கார்வார்கள். இன்னும் சிலர் ஒரு பக்கமாக சாய்ந்து முதுகு வளைந்து உட்கார்வார்கள். இன்னும் பலர் உட்கார்ந்த மாத்திரத்தில் அரை அடி ஆழத்துக்கு அழுந்திக்கொள்ளும் மெத்தைகளில் சாய்வார்கள் அல்லது படுப்பார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். முதுகெலும்பின் வளைவுக்கு அவை மோசம் செய்யும். நெடுஞ்சாலைகளில் ‘வளைவுகள் ஜாக்கிரதை’ எனும் அறிவிப்புகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த இடங்களில் கவனமாகச் செல்லாவிட்டால் விபத்துகள் ஏற்படுவதுபோல் முதுகெலும்பு வளைவுகள் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால் முதுகுவலி நம்மை முடக்கிவிடும்.

வயதாகும்போது முதுகெலும்பில் உள்ள இடைச் சவ்வு தேய்ந்துவிடும். அதில் நீர்ச்சத்து குறைந்துவிடும். குஷன்போல் இயங்க வேண்டிய இந்தச் சவ்வு குதிரை லாடம்போல் இறுகிவிடும். இதனால் முதியவர்களுக்கு முதுகுவலி வந்துவிடும்.

திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, வழுக்கி விழுவது, விபத்தில் அடிபடுவது, புகைபிடிப்பது, உடற்பயிற்சி இல்லாதது, உயரமான ஷூ அணிவது, சரியான முன் பயிற்சி இல்லாமல் ஓட்டப் பந்தயம்/ஜிம்/சர்க்கஸ் பயிற்சிகளில் கலந்துகொள்வது, கால்சியம்/வைட்டமின்-டி குறைவது, காசநோய், புற்றுநோய், கர்ப்பம் என முதுகுவலிக்கான காரணப் பட்டியல் ரயில் பெட்டிகள்போல் நீளமானது. இன்னும் சொன்னால் கடுமையான தும்மல், இருமல் வந்து முதுகுவலி வந்தவர்களையும் பார்த்திருக்கிறோம்.

இறுதியாக, கீழ்முதுகில் சிறிது சிறிதாக வலி ஏற்பட்டுத் திடீரென அது அதிகமாகிப் பின்புறத் தொடைக்கோ, காலுக்கோ பரவுமானால்/வலியைத் தொடர்ந்து கால் பகுதியில் மரத்துப்போன உணர்வு ஏற்படுமானால் அதுவும் ஒரு முதுகெலும்புச் சிக்கல்தான். படுத்து ஓய்வெடுத்தபின் வலி குறைகிறது; நடக்கும்போது வலி அதிகமாகிறது என்றால் சந்தேகமே வேண்டாம்… நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீர் புல்லுக்கும் போய்ச்சேர்கிறமாதிரி முதுகில் ஏற்பட்ட பிரச்சினை கால் நரம்புக்கும் பரவிவிட்டது என்று அர்த்தம்.

‘சியாட்டிகா’ (Sciatica) எனப்படும் அந்தக் கால் குடைச்சல் சிலருக்குப் படுக்கையில் முடக்கிப்போடும் அளவுக்குக் கொடியதாகிவிடும். அந்தக் கொடூர வேதனையில் நானும் ஒருமுறை சிக்கித் தவித்து மீண்டேன். எப்படி? அது அடுத்த கட்டுரையில்.


23.12. 2018 காமதேனு இதழ்.

 

பெட்டிச் செய்தி:               

முதுகுப் பிரச்சினையா? வயிற்றுப் பிரச்சினையா?

 

முதுகுக்கு முன்னே வயிற்றில் உள்ள சிறுநீரகம், பித்தப்பை, கணையம், கல்லீரல், கருப்பை ஆகிய உறுப்புகள் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள தொந்தரவுகளாலும் முதுகுவலி உண்டாகலாம். உதாரணத்துக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு முதுகு விலாவில்தான் அதிகமாக வலிக்கும். அதுபோல் வலி முதுகில் ஏற்பட்டாலும் தொப்புளுக்கு அது பரவினால், காய்ச்சலும் வாந்தியும் சேர்ந்துகொண்டால், ஓய்வெடுத்தாலும் வலி குறையவில்லை என்றால் அது வயிற்றுப் பிரச்சினையாகத்தான் இருக்கும். பொதுவாக, கீழ்முதுகு வலி 90% முதுகெலும்புத் தொடர்பாகவும் 10% வயிறு தொடர்பாகவும் இருக்கும். கீழ்முதுகில் வலி ஏற்பட்டு, ஓய்வுக்குப் பிறகு வலி கொஞ்சம் குறைகிறது என்றால், அடிக்கடி முதுகுவலி வந்து அந்தப் பகுதி பைசா கோபுரம்போல் சாயத் தொடங்கிவிட்டால் சந்தேகமில்லாமல் அது முதுகெலும்புப் பிரச்சினைதான். உடனே கவனிக்க வேண்டும்.


கட்டுரையாளர்,

பொதுநல மருத்துவர்,   

தொடர்புக்கு: gganesan95@gmail.com

===========================================================================================================

முகவரி:

Dr.G.Ganesan, MBBS.,  Ganesh Hospital,  19-A, Angiah Raja Street,  RAJAPALAYAM-626 117  

Mobile: 99524 34190     e-mail: gganesan95@gmail.com

 

 






















Comments

  1. நோய் நாடி,

    நோய் முதல் நாடி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?