சர்க்கரை நோய் : பாதம் பத்திரம்!

 

சர்க்கரை நோய் அறிவோம் - 3

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 


                       சர்க்கரை
நோய்பாதம் பத்திரம்!

ண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்என்பார்கள். அந்த எண் சாண் உடம்பையும் தாங்கும் தூண்கள், பாதங்கள் மட்டுமேஆனால், தலை(முடி)க்கும் முகப்பொலிவுக்கும் நாம் தரும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்குத் தருகிறோமா? நிச்சயமாக இல்லை. ஊடக விளம்பரங்களை நம்பி கண்ட காலணிகளை மாட்டிக்கொள்வதில் ஆண்கள் சளைத்தவரில்லை; ஏணிபோன்ற காலணிகளைப் பொருத்திக்கொள்வதில் பெண்கள் சலித்ததில்லை. அவை பாதங்களைப் பாதுகாக்குமா என்பதை இருபாலரும் யோசிப்பதில்லை. அதிலும் சர்க்கரைநோய் இருந்தால், பாதங்களைப் பராமரிக்க ரொம்பவும் மெனக்கெட வேண்டும். இன்றைய அவசர யுகத்தில் அதற்கெல்லாம் எங்கே நேரம்? பாதப்பராமரிப்பில் இப்படிப் பல குறைகள் இருப்பதால்தான்கால் ஆணியில் ஆரம்பித்து கால் இழப்புவரை பல பிரச்சினைகள் வேர்விடுகின்றன.

கால் பாதிப்புஅறிகுறிகள்

டாக்டர்! பாதம் மதமதப்பாக இருக்கிறது. பஞ்சு மெத்தையில் நடப்பதுபோல் இருக்கிறது”. “பாதம் முழுக்க மிளகாயை அரைத்துத் தேய்த்தமாதிரி ஒரே எரிச்சல்!”. “ராத்திரிபூரா பாதத்தில் குண்டூசி குத்தும் வலி! உறக்கமே இல்லை!”. “கெண்டைக்கால் தசையில் நண்டு மாதிரி குடையுது, டாக்டர்”. “காலில் சின்ன கொப்புளம்னு வந்தது. ஆறு மாசமா அது ஆறல!”.... காலில் பாதிப்பு ஏற்பட்ட சர்க்கரை நோயாளிகள் இப்படித்தான் புலம்புவார்கள். சிலர் பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதாகச் சொல்வார்கள்; இன்னும் சிலர் சேற்றுப்புண் வந்து அவதிப்படுவதாகக் கூறுவார்கள்.

எப்படி ஏற்படுகிறது?

சரியான உணவுமுறை, தேவையான உடற்பயிற்சி, முறையான சிகிச்சை இவற்றின் துணையுடன் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால், அது சும்மா இருப்பதில்லை. மழைக்கு ஒதுங்கிய பாம்புதான் என்றாலும் வீட்டுப் பாலை நக்கி விஷமாக்கிவிடுவதுபோல் நம் ரத்தத்தில் தங்கும் அதீத சர்க்கரை பல உறுப்புகளை அழிக்கப் பார்க்கும்; கண்ணில் தொடங்கி, மூளைக்குள் புகுந்து, இதயத்தில் நுழைந்து, சிறுநீரகத்தில்சுற்றுலாசென்று ரத்தக்குழாய்களையும் நரம்புகளையும் பதம்பார்க்கும்.

அருவித் தண்ணீர்தான் என்றாலும் அது குளத்தில் தேங்கிவிட்டால் நிறம் மாறுவதுபோல ரத்தத்தில் தேங்கி நிற்கும்குளுக்கோஸ்எனும் சர்க்கரை, ‘சார்பிட்டால்’ எனும் சர்க்கரையாக மாறிவிடுகிறது. சோப்புதான் என்றாலும் துணி துவைக்கும் சோப்பைக்கொண்டு உடம்புக்குக் குளித்தால் சருமம் அரிப்பதுபோலசார்பிட்டால் சர்க்கரைபுறநரம்புகளைச் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடுகிறது. இதனால் தொடுவுணர்வு குறைந்து கூச்சவுணர்வு உண்டாகிறது. மதமதப்பு ஏற்படுகிறது. காலில் முள் குத்துவதுகூடத் தெரியாதபடி பிரச்சினை பூதாகரம் ஆகிறது. அதேநேரத்தில் பாதங்களில் எரிச்சல்/ஊசி குத்தும் வலி கொல்கிறது. இதற்கு 'டயாபடிக் நியூரோபதி' (Diabetic Neuropathy) என்று பெயர். இந்த நிலைமையில்பாதங்களில் சின்னதாகப் புண் வந்தால்கூட உணர முடியாது. உடனே உஷாராகி ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திவிட்டால், பிரச்சினை பெரிதாகாது. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர்.தீக்கங்கை மிதித்து அணைக்காமல் அது தீப்பிழம்பானதும் தண்ணீருக்கு அலைவதுபோல் பாதப்பராமரிப்பின் அவசியத்தை ஆரம்பத்தில் உணராமல், பாதங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு பல மருத்துவமனைப் படியேறி அல்லாடுகின்றனர்.

இவர்களுக்கு நரம்பு பாதிப்பு இத்தோடு முடிவதில்லை. பாதங்களில் தசைகள் சுருங்கிவிட உடல் அழுத்தம் அதிகமாகும். அப்போது தோல் தடிப்பாகும் (Callus). வியர்வை குறைவாகச் சுரக்கும்சருமத்தில் வெடிப்புகள் உண்டாகும். அந்த வெடிப்புகளில் பாக்டீரியாக்கள் சுலபத்தில் புகுந்துவிடும். அங்கே புண்கள் ஏற்பட்டு சீழ் வைக்கும். மாற்றாக, வைரஸ் தொற்று ஏற்பட்டால்கால் ஆணி’ (Corn) உருவாகும்; பூஞ்சைக் கிருமி என்றால்சேற்றுப்புண்வரும்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தக்குழாய்கள் எளிதில் பாதிக்கப்படும். கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்துவிடும். காலில் சின்னப் புண் வந்தால்கூட ஆறுவதற்குத் தாமதம் ஆகும். கெண்டைக்காலில் குடைச்சல் உண்டாவதற்கும் இதுதான் காரணம். ரத்த அழுத்தம்/கொலஸ்டிரால் கூடுதலாக இருப்பவர்களுக்கு/புகைபிடிப்பவர்களுக்கு இந்தப் பாதிப்புகள் சீக்கிரத்திலேயே வந்துவிடும்இவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் காலணி இல்லாமல் நடக்கும்போது கல்/முள் குத்துவது தெரியாது. குளிர் காய்ச்சல் வந்தபிறகு அல்லது புண்ணில் சீழ் வைத்தபிறகு தெரியவரும். அப்போது கால் சிவந்து வீங்கிவிடும். அதைச் சரியாக கவனிக்கவில்லையென்றால் புண் அழுகி கால் இழப்பில் கொண்டுபோய் விடும். பலருக்கும் புண் மூடாமல் குழியாகவே இருக்கும். மறுபடி மறுபடி அதில் தொற்று ஏற்பட்டு புரையேறிவிடும். புண்ணில் காளான் கிருமி தொற்றிவிட்டால், புலி வாலைப் பிடித்த கதையாகிவிடும்அப்புறம் காலமெல்லாம் காலில் கட்டுப்போட்டுத் திரிய வேண்டும்.

சிகிச்சை என்ன?

மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளுக்கும் பிரதான தீர்வு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்கு இன்சுலின் மட்டுமே கைகொடுக்கும். ஆனால், எத்தனை பேர் இன்சுலின் போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள்?

மிகச் சமீபத்தில் அப்படியொரு நோயாளியைச் சந்தித்தேன். அந்த இளைஞனுக்கும் பாத எரிச்சல்தான் பிரச்சினை. அவனுக்கு இரும்புலேத்தில் வேலை. ஏற்கனவே அங்கு உஷ்ணம் அதிகம். இப்போது எரிச்சலும் எகிறிவிட அவன் வேதனை தாங்காமல் டாக்டர்களைத் தேடி அலைகிறான். நான் அவனுக்குப் பத்தாவது டாக்டர். பரி்சோதித்ததில் ரத்தச் சர்க்கரை 400ஐத் தாண்டியது.  அவன் அதுவரை சாப்பிட்டுவந்தபலசரக்கு லிஸ்ட்மாதிரியான மாத்திரைகளையெல்லாம் தலையைச் சுற்றி வீசியெறிந்து விட்டு, இன்சுலின் போட்டுக்கொள்ளச் சொன்னேன். முதலில் அவன் மறுத்தான். “இந்தச் சின்ன வயதிலேயே இன்சுலின் போட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் போடவேண்டியது வருமே!” என்று யோசித்தான். “தம்பி, உனக்கு நரம்புகள் ரொம்பவும் கெட்டுவிட்டன. இருக்கிற டயாபிடிஸ் மாத்திரைகள் எல்லாவற்றையும் நீ சாப்பிட்டுவிட்டாய். எதிலும் எரிச்சல் குறையவில்லை. இனி இருப்பது இன்சுலின் ஒன்றுதான். அதையும் இப்போதே உபயோகித்தால்தான் பலன் உண்டு. புறநரம்புகள் பாதிக்குமேல் அழிந்துவிட்டால், உன் பிரச்சினை நிரந்தரமாகிவிடும். அதற்குப் பிறகு இன்சுலினும் பலன்தராது. வாழ்நாள் முழுவதும் பாத எரிச்சலோடுதான் நீ பயணப்பட வேண்டும். உன் பயணம் இன்சுலினுடனா, பாத எரிச்சலுடனா என்பதைத் தீர்மானித்துக்கொள்என்றதும், அவன் நிலைமையைப் புரிந்துகொண்டு என் வழிக்கு வந்தான். இன்சுலின் சிகிச்சையைத் தொடங்கிய சில வாரங்களில் அவனுக்குப் பாத எரிச்சல் குறைய ஆரம்பித்துவிட்டதாக அகமகிழ்ந்து அலைபேசினான்.

இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புவது இதுதான்: குறைந்தது 3 மாதங்களுக்காவது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை சரியாக இருந்தால் மட்டுமே பாத எரிச்சலும் ஊசி குத்தும் வலியும் கொஞ்சமாவது குறையும். ஓராண்டுக்கு இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்தால் இரண்டுசாத்தான்களும் சரணடையும். அதிலும் புறநரம்புகள் பாதிக்குமேல் பாதிப்பதற்குள் இன்சுலின் சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். இப்படிச் செய்யாமல் மாதம் ஒரு மருத்துவரை மாற்றினாலும், கிலோ கணக்கில் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், வாரா வாரம்சிவப்பு ஊசிகளைப் போட்டுக்கொண்டாலும் பாத எரிச்சல் போகாது; குத்தும் வலி குறையாது.

பராமரிப்பது எப்படி?

தினமும் காலையில் எழுந்ததும் பாதங்களைக் கவனியுங்கள். சிராய்ப்புகாயம்கொப்புளம், வெடிப்பு, சருமம் சிவப்பதுவீங்குவது, நிறம் மாறுவது... இவற்றில் ஒன்று தெரிந்தாலும் உடனே மருத்துவரிடம் காட்டுங்கள். கால் மற்றும் பாதங்களைக் காலையிலும் மாலையிலும் சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டுக் கழுவிஈரம் போகத் துடைத்துக்கொள்ளுங்கள். விரலிடுக்குகளைச் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

ஒன்று சொல்கிறேன். நாம் கடலில் ரசித்துக் குளிக்க வேண்டுமானால் அதிக ஆழமும் ஆகாது; அதிக அலைகளும் கூடாது. அதுமாதிரிதான் நம் பாதங்களுக்கு அதிகச் சூடும் ஆகாதுஅதிக ஈரமும் கூடாது. சூடு அதிகமானால் கொப்புளம் வரும். ஈரம் அதிகமானால் காளான் தொற்று வரும். கால்களில் சூடாக ஒத்தடம் கொடுப்பதும், வீரியமான தைலங்களைத் தடவுவதும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. இதையும் சொல்ல வேண்டும். பிளேடால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நக ஓரங்களைப் பிய்க்காதீர்கள்; கடிக்காதீர்கள். பாதங்களில் தோல் தடிப்பு/கால் ஆணி இருந்தால் கத்தியால் கீறாதீர்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்க....

அதிக நேரம் அமர்ந்தே இருப்பது நல்லதல்ல. நாற்காலியில் அமரும்போது கால்மேல் கால்போட்டு அதிக நேரம் அமர வேண்டாம். தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக வைத்தும் அமராதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணுக்காலையும் பாதங்களையும் அசைத்துக்கொண்டே இருங்கள். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். புகைபிடிக்காதீர்கள். மது வேண்டாம்.

காலணியும் காலுறையும்

வெறுங்காலில் நடக்காதீர்கள். சரியான அளவுள்ள காலணிகளை அணியுங்கள். வீட்டிற்குள்ளும் காலணி அணிவது அவசியம். எம்.சி.ஆர். (MCR) அல்லது எம்.சி.பி. (MCP) காலணிகள் நல்லது. விரல் நுனிகளையும் மூடும்படியான காலணிகள் பாதுகாப்பானவை. உயரம் இல்லாத காலணிகளே உகந்தவை. பிளாஸ்டிக் காலணிகளைத் தவிர்க்கவும். ஷூ அணிவதற்கு முன்பு அதற்குள் சிறு கல்முள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிடுங்கள். வியர்வையை உறிஞ்சும் பருத்திக் காலுறைகளே உசத்தி. நைலான் வகைகளையும், ரப்பர்/எலாஸ்டிக் வளையம் உள்ள காலுறைகளையும் தவிர்க்கவும். சரியான அளவுள்ள மெல்லிய காலுறைகளை அணியவும். இன்சுலின் சிகிச்சையுடன் மேம்பட்ட பாதப் பராமரிப்பும் கைகோர்த்தால் உங்கள் பாதங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். செய்வீர்களா?

பெட்டிச் செய்தி :  

உங்கள் பாதம் பத்திரமா?

 

ர்க்கரை நோயாளிகள் வருடத்துக்கு ஒருமுறையாவது இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் பாதப்பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துகளையெடுக்கமுடியும்; கால்களைக் காப்பாற்ற முடியும்.

 

என்ன பரிசோதனை?

எதற்கு செய்கிறார்கள்?

 

1. நுண்ணிழைப் பரிசோதனை (Monofilament Test).  

 

சருமத்தில் தொடுவுணர்வைப் பரிசோதிக்க.

2. பயோதெசியோமெட்ரி (Biothesiometry).

பாதங்களில் நரம்பு பாதிப்பை அறிய.

3.  பீடோபோடோகிராப் (Pedopodograph).

பாதங்களில் அழுத்தம் அறிய.

4. டாப்ளர் ஸ்கேன் (Doppler Scan).

கால்களில் ரத்த ஓட்டம் சரி பார்க்க.

 

27. 01. 2019 காமதேனு இதழ்.

டாக்டர் கு. கணேசன், MBBS.

நான் யார்?

பொதுநல மருத்துவன். மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்கணேஷ் மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

எழுத்துப் பணி: மருத்துவ அறிவியல் எழுத்தாளர். இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன். தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், குமுதம், குங்குமம், கல்கி, ஹெல்த் & பியூட்டி, டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், குமுதம் ஹெல்த், கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்பு. தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

விருதுகள்: மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதானதேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்தமிழ்ப்பேராய விருது’, சென்னை, முத்து பார்மஸியின்சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின்தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன். ‘பாரதிப் பணிச் செல்வர்’, ‘மருத்துவ இலக்கிய மாமணி’ எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

குடும்பம்: மனைவி திருமதி லலிதா கணேசன். மகன் டாக்டர் . திவாகர், MBBS., DNB.,  தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் (Intensivist), (ஜெம் மருத்துவமனை, கோவை). மருமகள் டாக்டர் பௌசியா, MD., குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். பேத்தி தியா. மகள் டாக்டர் . ஆர்த்தி, MBBS.,

முகவரி:

·         Dr. G. Ganesan, MBBS.,             Ganesh Hospital,

·         53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

·         VIRUDHUNAGAR – DT            Mobile: 99524 34190      

·         e-mail: gganesan95@gmail.com

·         வலைதளம்: https://kuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?