கழுத்துவலியும் காணாமல் போகும்!

 







     


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

 

ழுத்துவலிக்குப் பல காரணங்கள் பார்த்தோம். அந்தக் காரணங்களை அகற்றினால் போதும், கழுத்துவலி காணாமல் போகும். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கழுத்துவலி கட்டுப்படவில்லை என்றால், குடும்ப மருத்துவரைப் பாருங்கள். கழுத்துக்கு எக்ஸ்-ரே எடுங்கள். கைக்கும் வலி பரவுகிறது என்றால், சி.டி.ஸ்கேன்/எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பது அவசியம். 40 வயதைக் கடந்தவர்களுக்கு இ.சி.ஜி.யும் தேவை. காரணம் தெரிந்து சிகிச்சை எடுத்தால் சீக்கிரம் இது சரியாகும்.

‘முறையான’ சிகிச்சை எது?

வலி ஊசிகள்/மாத்திரைகள் அவசரத்துக்கு உதவும். ஆனால், அவை அடிக்கடி வேண்டாம். அப்புறம் சிறுநீரகம் கோபித்துக்கொள்ளும்! கழுத்துவலிக்கு ‘பிசியோதெரபி’தான் சிறந்த சிகிச்சை. அதில் பல விதம் உண்டு. எலும்பு இடை வட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நுண்ணொலி சிகிச்சை (Ultrasonic therapy) உதவும். வலிக்கின்ற இடத்தில் ‘மின் ஒத்தடம்’ கொடுக்கும் சிகிச்சை இது. வலி உடனே கட்டுப்படும். ஜவ்வு நசுக்கல் பிரச்சினை ‘உடன்பிறப்பாக’ இருந்தால், டிராக்ஷனும் ‘டென்ஸ்’ சிகிச்சையும் (TENS therapy) தேவைப்படும். மோசமான சாலைகளில் பயணம் செய்பவர்கள் கழுத்தில் ‘காலர்’ அணிவது அவசியம்.

திறந்தவெளியில் தீயை அணைப்பதற்குத் தண்ணீர் இருந்தால் போதாது; வீசும் காற்றும் முக்கியம். அதுமாதிரி, இதுவரை சொன்ன சிகிச்சைகள் கழுத்துவலியைக் கட்டுப்படுத்துமே தவிர, அது மறுபடியும் வருவதைத் தடுக்காது. அதற்குக் கழுத்துப் பயிற்சிகள்தான் (Isometric neck exercises) உதவும். கழுத்துவலிக்கு ‘முறையான’ சிகிச்சை இதுதான். இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றைச் சோம்பல்படாமல் செய்தவர்கள் கழுத்துவலிக்கு ‘டாட்டா’ சொல்லியிருக்கிறார்கள்.

கழுத்தைக் கவனியுங்கள்!

பல சமயங்களில் கழுத்தின் நிலையைச் சரி செய்தாலே கழுத்துவலியைக் கடத்திவிடலாம். மருத்துவ நண்பர் ஒருவர் அடிக்கடி கழுத்து வலிப்பதாகச் சொல்வார். ஒருமுறை அவரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போயிருந்தபோது, தற்செயலாக அது ஞாபகத்துக்கு வந்தது. என் மருத்துவப் புத்தி சும்மா இருக்குமா? அவர் அமர்ந்திருக்கும் அறையை நோட்டம் விட்டேன். ‘எக்ஸ்-ரே லாபி’ என் கண்ணில் பட்டது. அதுதான் அவருடைய கழுத்துவலிக்குக் காரணகர்த்தா என்பது புரிந்தது.

 “உங்கள் ‘எக்ஸ்-ரே லாபி’ அண்ணாந்து பார்க்கிற உயரத்தில் இருக்கிறது. அதைக் கண்ணுக்கு நேராகக் கொண்டு வந்தால் கழுத்துவலி சரியாகிவிடும்” என்று யோசனை சொன்னேன். ஒரு மாதம் கழித்து அவர் அலைபேசினார்: “கழுத்துவலி போயே போச்சு!”.

மருத்துவர்கள் அவ்வப்போது பார்க்கும் ‘எக்ஸ்-ரே லாபி’ சரியான உயரத்தில் இல்லை என்றாலே, கழுத்து வலிக்கிறது என்றால், பொழுதுக்கும் கணினியில் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்!

20-20-20 விதி தெரியுமா?

கணினி மேஜையும், நாற்காலியும் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது. முதுகு மற்றும் கழுத்தின் பாரத்தைத் தாங்கும் வகையில் இருக்கையில் குஷன் இருந்தால் இன்னும் சிறப்பு. நிமிர்ந்து உட்காருவதும், கால்களை செங்குத்தாகத் தொங்கப்போட்டு, தரையில் பதித்துக்கொள்வதும் முக்கியம்.

அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும். கணினித் திரையின் மேல்மட்டம் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும். மவுஸை இயக்கும் கைகளுக்கு இருக்கையிலோ, மேஜையிலோ சப்போர்ட் இருக்க வேண்டும். விசைப்பலகை மேஜையின் நுனியிலிருந்து அரை அடி உள்தள்ளி இருக்க வேண்டும்.

கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி, 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். மணிக்கொருமுறை 5 நிமிடம் எழுந்து நிற்கலாம்; நடக்கலாம்; கை, விரல்களை நீட்டி மடக்கலாம். இப்படிக் கழுத்துக்கு ஓய்வு தருவது முக்கியம்.

மடிக்கு ஆகாத கணினி!

‘மடிக்கணினி’ என்று பெயர் இருப்பதாலேயே, அதை மடியில்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அப்படி அதிக நேரம் அதைப் பயன்படுத்தும்போது கழுத்துக்கு மட்டுமல்ல, கைகளுக்கும் பிரச்சினை தரும். இன்று பலருக்கும் கை விரல்கள் வலிப்பது, இழுத்துக்கொள்வது, மணிக்கட்டில்/முழங்கையில்/ தோளில் வலி ஏற்படுவது போன்ற பல தொல்லைகள் மடிக்கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதாலேயே வருகின்றன. மடிக்கணினியை மேஜைமேல் வைத்துப் பயன்படுத்துவதே சரி.

தலைச்சுமை கவனம்!

     தலை தாங்கும் அளவுக்குத்தான் சுமை தூக்க வேண்டும். ஆனால், பலரும் அதில்தான் தவறு செய்கின்றனர். உதாரணமாக, சரக்கு வாகனங்களுக்குச் சுமை தூக்கும் தொழிலாளிகள், ரயில்வே போர்ட்டர்கள், மாட்டுக்கு வைக்கோல் சுமப்பவர்கள், கட்டிட வேலை மாதிரியான கடின வேலை செய்பவர்கள் சீக்கிரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே சமயத்தில் பல மடங்குச் சுமையைத் தலையிலும் தோளிலும் சுமக்கின்றனர். இது தவறு. குருவித் தலையில் பனம்பழம் வைப்பதுபோல் யார் இந்தத் தவறைச் செய்தாலும் கழுத்துக்கு அது ஆகாது!

     கட்டிலைக் கவனி!

கழுத்தில் தொடங்கி இடுப்பில் முடியும் ‘முதுகெலும்புச் சங்கிலி’ லத்திக் கம்புமாதிரி நேராக இருக்காது. அதில் நடுநடுவே சில வளைவுகள் உண்டு. அந்த வளைவுகள் விலகினால், கழுத்துவலி மட்டுமல்ல முதுகுவலியும் சேர்ந்துகொள்ளும். வழக்கத்தில் நார்க் கட்டில், நாடாக் கட்டில், கயிற்றுக் கட்டில், மடக்குக் கட்டில் போன்றவற்றில் படுத்து உறங்குவது இந்த வளைவுகளுக்கு வில்லங்கம் ஆவதால் இவற்றில் படுக்கக்கூடாது. பதிலாக, கட்டாந்தரையில் படுப்பது மிக நல்லது. அல்லது மேற்புறம் மட்டும் மிருதுவாக உள்ள பஞ்சுமெத்தையில் படுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மெத்தை ஓர் அங்குலத்துக்கு அதிகமாக அமுங்கக்கூடாது.

அடுத்து, சந்தையில்/ஷாப்பிங் மால்களில் சரக்கு வாங்குபவர்கள் கைகளில் அதிகச் சுமை தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். நீண்டநேரம் ஒரே கையில், ஒரே நிலையில் எந்தச் சுமையையும் தூக்கக்கூடாது; சுமையைக் கைகளில் தொங்கப்போடக்கூடாது; அடிக்கடி கை மாற்றிக்கொள்ள வேண்டும். கையில் சுமையுடன் நடப்பதாக இருந்தால், சுமையை இரண்டு கைகளிலும் சமஅளவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மசாஜ் செய்யலாமா?

கழுத்துவலி உண்டானாலே ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளவும் ஒரு கூட்டம் ஆர்வம் காட்டும். தசைகளில் மட்டும்தான் பிரச்சினை என்றால் மசாஜ் கைமேல் பலன் கொடுக்கும். ஜவ்வு விலகி இருந்தால், மசாஜ் செய்வதற்கு யோசிக்க வேண்டும். ஏனெனில், சீலா மீனுக்கு ஆசைப்பட்டு சுறா மீனிடம் சிக்கிக்கொண்டதுபோல் அரைகுறை மசாஜ் ஆட்களிடம் கழுத்தைக் கொடுத்து பாதிப்பை அதிகப்படுத்திக் கொண்டவர்களையும் எங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

பயிற்சிகள் முக்கியம்!

“கரை உடைந்தால்தான் அணை கட்டுவோம்” என்று அடம்பிடிப்பது எத்தனை தவறோ, அத்தனை தவறு கழுத்துவலி வரும்வரைக் காத்திருப்பதும். எனவே, கணினியில் வேலை பார்ப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், மெஷினில் தைப்பவர்கள்…. இவர்கள்போல் கழுத்துவலி வருவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் நாள்தோறும் கழுத்துக்குப் பயிற்சி கொடுத்தால், கழுத்துவலி வராமல் பார்த்துக்கொள்ளலாம். ‘யோகா’தான் இஷ்டம் என்றால், அதுவும் சரிதான்.

கழுத்துவலியைக் கட்டுப்படுத்த இத்தனை வழிகள் இருக்கும்போது, கன்னத்தில் ஏன் கைவைக்கிறீர்கள்?  கவலையை விடுங்கள்!

பெட்டிச்செய்தி:

ஸ்மார்ட்போன் கவனம்!

       ஸ்மார்ட்போன்/டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 - 4 மணி நேரம் அதை நோண்டிக்கொண்டிருக்கிறார். இதன்படி வருடத்துக்கு 700 - 1400 மணி நேரத்தை நவீன வாழ்வியல் நம்மிடமிருந்து பறித்துக்கொள்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்க்கும் தோரணையாவது சரியாக இருக்கிறதா? ஸ்மார்ட்போனைப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் கழுத்தின் நிலையை யாரும் கவனிப்பதில்லை.சாய்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் குனிந்து கொண்டும்தான் பெரும்பாலானவர்கள்  ஸ்மார்ட்போனைப் பார்க்கின்றனர். ஷேர் ஆட்டோ போன்ற குலுங்கலான பயணத்தின்போதுகூட பலருக்கும் ஸ்மார்ட்போனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இந்த நவீன மோகம் கண்ணைக் கெடுக்கிறது; கழுத்துவலியைக் கொண்டுவருகிறது. இது என்னுடைய புலம்பல் மட்டுமல்ல. ‘சர்ஜிக்கல் டெக்னாலஜி இன்டர்னேஷனல்’ எனும் மருத்துவ இதழின் புலம்பலும் இதுதான்! கழுத்தை நேராக வைத்துக்கொண்டு கண்ணுக்கு முன்னால் ஸ்மார்ட்போனைப் பிடித்துக்கொண்டு, அளவோடு பார்த்தால் கண்ணுக்கும் கழுத்துக்கும் பிரச்சினை இல்லை.

19.08.2018 காமதேனு இதழுக்குரியது.

முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,                Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                   Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com


 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?