முத்தான சத்துள்ள முட்டை!

  

இன்று (09.10.2020) உலக முட்டை தினம் : சிறப்புக் கட்டுரை

 


 

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்

 


முத்தான சத்துள்ள முட்டை

ம்முடைய வழக்கமான உணவுகளில் ‘பரிபூரண உணவு’ என்று நம்பிச் சாப்பிடுவது பாலையும், முட்டையையும்தான். விலை குறைவு, எளிதில் கிடைக்கிறது, சமைப்பதில் சிரமம் இல்லை, சத்து மிகுந்தது, அதிக ஆற்றல் தருவது, சுவையானது போன்ற பல காரணங்களால் முட்டையை நம் உணவுத் திட்டத்தில் சேர்த்திருக்கிறோம்.

என்ன சத்து உள்ளது?

100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், மாவுச் சத்து 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்டிரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச் சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 60 - 70 கலோரி சக்தி கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை, ஒரு பழம், 150 மி.லி. பால் சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தியைக் கொடுத்துவிடும்.

பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?

முட்டையை வேகவைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்' என்று பொதுமக்களிடம் நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, தடகள வீரர்கள், உடல் வலிமைக்காக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் பச்சை முட்டையைக் குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது. வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவில் 'அவிடின்' எனும் புரதம் உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினோடு இணையும்போது பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்து விட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். பயாட்டின் நம் முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே எப்போதும் நல்லது. முட்டையில் ‘சால்மோனல்லா’ பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. முட்டையை அவிக்கும்போது அவை இறந்துவிடும். இதன் பலனாக முட்டையின் மூலம் டைபாய்டும் வயிற்றுப்போக்கும் ஏற்படுவது தடுக்கப்படும்.

எத்தனை முட்டை சாப்பிடலாம்?

ஒரு வயதிலிருந்து 40 வயதுவரை உள்ளவர்கள், எடை குறைவாக இருக்கும் பட்சத்தில் தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். இதே வயது வரம்பில் சராசரி எடை உள்ளவர்கள் மற்றும் வளர்ச்சிப் பருவத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். உடற்பருமன் உள்ள குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் அளவு கூடினால் கொலஸ்டிரால் அளவு அதிகரித்துவிடும். அது ஆரோக்கியத்துக்கு ஆபத்து தரும். 40 வயதைக் கடந்தவர்கள் வாரம் இரண்டு முட்டை சாப்பிடலாம்.

அறுபது வயதைக் கடந்தவர்கள் மாதம் இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம். முட்டையைத் தவிர்க்க முடியாதவர்கள் அதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். முதியோர்கள் முட்டையைப் பொரித்து ஆம்லேட் போட்டு சாப்பிடுவதைவிட அவித்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

இது இளைய வயதினருக்கு

இளைய வயதினர் முட்டையை குழம்பு வைத்தும் சாப்பிடலாம்; உப்பும் மிளகும் போட்ட ஆம்லேட்டாகவும் சாப்பிடலாம். முட்டை பொடிமாஸும், முட்டை மசாலாவும் நல்லதுதான். மிளகுத்தூள் போட்ட முட்டை உணவுச் செரிமானத்துக்கு உதவும். முட்டை மசாலாவில் உள்ள தக்காளி, வெங்காயம் போன்றவை நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, தாதுக்கள் கிடைக்க வழி செய்யும். இவை உடலில் தசை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

இதய நோயுள்ளவர்கள் வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம். இவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடுவது மிக நல்லது. மஞ்சள் கருதான் ஆபத்து. இவர்கள் அவித்த முட்டையைச் சாப்பிடுவது நல்லது. ஆம்லேட், உப்பு, மிளகு போட்ட முட்டை, முட்டை மசாலா, பொடிமாஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். மஞ்சள் கருவில் கலோரி சக்தி அதிகம். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரக நோயாளிகள் முட்டைப் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது. காரணம், முட்டையில் அல்புமின் எனும் புரதம் உள்ளது. இது இவர்களுக்கு ஆகாது. குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் முடிந்ததும், தாய்ப்பாலுடன் இணை உணவைக் கொடுக்கத் தொடங்கும்போது முட்டையையும் கொடுக்கத் தொடங்கலாம்.

என்னென்ன நன்மைகள்?

முட்டையில் உள்ள புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன; நாள் முழுவதும் களைப்பு தெரியாமல் உழைக்க முடிகிறது; நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தைக்குப் பிறவி ஊனங்கள் ஏற்படாது, காரணம், முட்டையில் உள்ள கொலின் சத்து பிறவி ஊனங்களைத் தவிர்க்க உதவுகிறது. தேவையான அளவுக்கு முட்டை சாப்பிடுபவர்களுக்குப் பார்வைக் குறைபாடு வருவதில்லை. உடல் எப்போதும் பொலிவு பெறும். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

முட்டையில் உள்ள வைட்டமின் - ஏ கண் பார்வைக்கு உதவும். பயாட்டின் முடி வளர்ச்சிக்கு உதவும். கொலின் கல்லீரல் இயக்கத்துக்குப் பயன்படும். சிசுவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். இதிலுள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்குத் தேவையானது. சிசுவுக்குத் திசுக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. லூட்டின், சியாசாந்தைன் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் கண் பார்வைக்குப் பயன்படும். வயதான காலத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை இவை தடுக்கும். வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தைக் காக்கும். வைட்டமின்-பி2, பி12 ரத்த உற்பத்திக்குப் பயன்படும். வைட்டமின்-இ பாலினச் சுரப்புகளை மேம்படுத்தும். இரும்பு ரத்தவிருத்திக்கு உதவும்; ரத்தசோகையைத் தடுக்கும். அயோடின் தைராய்டு கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்ளும். பென்டோதெனிக் அமிலம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும்; இளநரை ஏற்படுவதைத் தடுக்கும்; நினைவாற்றலை வளர்க்கும்.

அலர்ஜி ஆகும் முட்டை!

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் முட்டை அலர்ஜி ஆவதும் உண்டு. முட்டை சாப்பிட்டதும் உடலில் அரிப்பு ஏற்படுவதும் தடிப்புகள் தோன்றுவதும் வழக்கம். வெள்ளைக் கருவில் உள்ள ஆல்புமின், டிரான்ஸ்ஃபெரின் போன்ற புரதங்களும் மஞ்சள் கருவில் உள்ள லிவிட்டின், அபோலிவிட்டின் பாஸ்விடின் போன்ற புரதங்களும் அலர்ஜியை உண்டாக்குவதுதான் இதற்குக் காரணம். இப்படி அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் முட்டையைச் சாப்பிட வேண்டாம்.

தினமலர் மதுரை பதிப்பு – 10.06.2019

===============================================================================================================கட்டுரையாளர் முகவரி:

Dr. G. Ganesan, MBBS., Ganesh Hospital, 53/19-A, Angiah Raja Street, RAJAPALAYAM-626 117  VIRUDHUNAGAR – DT.

Mobile: 99524 34190   e-mail: gganesan95@gmail.com

வலை தளம்https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?