கழுத்துவலிக்குக் காரணம்!

 

 




                


      

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

 

முப்பது வருடங்களுக்கு முன்பு பட்டிதொட்டி எங்கும், ஆணும் பெண்ணும் தலையில் மண் கூடை, சாந்துச் சட்டி, தண்ணீர்க் குடம் சுமந்தார்கள்; களத்தில் தானிய மூட்டைகளைத் தூக்கினார்கள்; குளம், குட்டை, ஆற்றுக்குத் துணி மூட்டையைக் கொண்டுபோய்த் துவைத்தார்கள்; திருவிழாவுக்குச் செல்லும்போது, குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் கழுத்துவலி வந்து அதிகம் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை; கழுத்தில் ‘காலர்’ கட்ட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

‘நவீனத் தொழில்நுட்பம்’ என்னும் பெயரில் வீடு, வயல், ஆலை, அலுவலகம், வேலை சார்ந்த இடம் எனச் சகலத்திலும் ‘மெஷின்’கள் வந்து உட்கார்ந்து கொண்டதும், தலைச்சுமை வேலைகள் ரொம்பவே குறைந்துவிட்டன. ஆனாலும், இப்போதுதான் கழுத்தில் வலி வந்து ‘காலர்’ கட்டிக் கொண்டவர்களை அதிகம் காண்கிறோம்.

என்ன காரணம்?

காட்டு வேலை, கட்டிட வேலை, ரோட்டு வேலைக்குச் செல்கிறவர்கள் தொடங்கி, வீட்டுப் பெண்கள், பதின்பருவத்தினர், அலுவலகம் செல்கிறவர்கள்வரை இன்றைய இளைஞர்களில் 75% பேர் கழுத்துவலிக்கு சிகிச்சை எடுப்பதாக ‘ஜர்னல் ஆஃப் ஆர்த்தோபீடிக்ஸ்’ எனும் பிரபல மருத்துவ இதழ் கருத்து சொல்லியிருக்கிறது. அது எடுத்த ‘சர்வே’யில், ‘கணினி, தொலைக்காட்சி, செல்போன், ‘டேப்லட்’ எனும் நவீன ‘சூனியக்காரிகள்’ நான்கும் சேர்ந்து நாட்டில் வைத்திருக்கும் ‘சூனியம்’ இது’ என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

கழுத்துவலி ஏன்?

இளமையில் கழுத்துவலி வர முக்கியக் காரணம் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது தலையை அதனால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. எனவே, வலி வந்து படுத்துகிறது.

‘இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!’ - கண்ணதாசன் சொன்னது. இதில் அர்த்தம் உள்ளது. அதிலும் கழுத்துக்கு இது ரொம்பவே பொருந்தும். கழுத்தை நம் இஷ்டத்துக்கு நீட்டி, வளைத்துத் திருப்பினால்தான் பிரச்சினை. இதைப் புரிந்துகொள்ளாமல் கழுத்துக்கு நாம் எத்தனை சிரமங்களைத் தருகிறோம்!

படுத்துக்கொண்டே சாப்பிடுவோமா? இல்லையே! அப்படியிருக்க, படிப்பது மட்டும் படுத்துக் கொண்டே ஏன்? அப்படிச் செய்தால், புத்தகத்தின் எடையும் கழுத்தில் இறங்கும். அப்போது கழுத்துத் தசைகளுக்குச் சமமாகப் பாரம் கிடைக்காது; ஏதேனும் ஒரு பக்கத்துத் தசைகளுக்குப் பளு கூடிவிடும். இதனால் அந்தப் பகுதியில் வலி ஏற்படும். இதுபோல் படுத்துக்கொண்டே செல்போனை நோண்டுவதும் ‘வீடியோ கேம்ஸ்’ விளையாடுவதும் கழுத்துக்கு நாமே வைத்துக்கொள்ளும் ‘கண்ணிவெடிகள்’தான்.

சமீபகாலமாகக் கழுத்துவலிக்காக என்னிடம் வரும் இளைய வயதினர் பலரையும் கவனித்ததில், மணிக்கணக்கில் அவர்கள் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பதுதான் கழுத்துவலிக்குக் காரணம் என்பது புரிந்தது. இப்போதெல்லாம் கணினி இல்லாத இடமில்லை. செல்போன் அளவிலிருந்து சுவரில் பொருத்தப்படும் டிவி அளவு வரை விதவிதமான கணினிகள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதைக் கணினி நிறுவனத்தினர் ஆரம்பத்தில் கற்றுக்கொடுக்கின்றனர்.

ஆனால், கண்ணுக்கு எந்த மட்டத்தில் கணினியை வைத்துக்கொள்ள வேண்டும்; அதன் எதிரில் எந்த உயரத்தில் இருக்கையில் அமர வேண்டும்; கழுத்துக்கு எப்படி ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத் தருவதில்லை. அது அவர்களுக்குக் கட்டாயமும் இல்லை; கவலையும் இல்லை. ஆனால், கழுத்தைத் தூக்கித்தான்/குனிந்துதான் கணினித் திரையைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால், கழுத்துவலி நிச்சயம்.

இதுபோல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடை இல்லாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கழுத்தில் வலி ஏற்படும்; பேருந்துகளில் பின் சீட்டுகளில் அமர்ந்து கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்குக் கழுத்தில் வலி வரும்.

இன்னொன்று, நாம் பயணம் செய்வது இரு சக்கர வாகனமா, நான்கு சக்கர வாகனமா என்பது முக்கியமில்லை; செல்லும் சாலை சரியாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். சாலை சரியில்லை; வேகத்தடைகள் அதிகம் என்றால் கழுத்துவலி உறுதி. பயணத்தின்போது வண்டிக் குலுங்கல்களால் கழுத்தில் உள்ள எலும்பிடைத் தட்டுகளைப் பழுதாக்கி விடுவதுதான் இதற்குக் காரணம்.

என்னிடம் கழுத்துவலிக்கு சிகிச்சை பெற மென்பொருள் பொறியாளர் ஒருவர் அடிக்கடி வருவார். அவருக்கு அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே மென்பொருள்களைத் தயாரித்து அனுப்பும் வேலை. ஒரு முறை அவர் பணி செய்யும் தன்மையை விசாரித்தேன். அவர் பகல் முழுவதும் மேஜை மேலிருக்கும் கணினியில் பணி செய்கிறார்; இரவில் கட்டிலில் சாய்ந்துகொண்டு, படுக்கையில் கால்களை நீட்டிக்கொண்டு, மடிக்கணினியை மடியில் கட்டிக்கொண்டு, கழுத்தைக் குனிந்துகொண்டு பணி செய்கிறார். காரணம் கேட்டால், “உறக்கம் வந்தவுடன் உடனே படுக்கையில் சாய்ந்துவிட இதுதான் வசதி” என்கிறார். அவருடைய வசதிக்குக் கணினியைத் தன்னுடைய மடிக்கு மாற்றிக்கொண்டார். தலையைத் தாங்கும் கழுத்தின் வசதியை அவர் கவனிக்கவில்லை. எனவே, வலி.

என்னிடம் கழுத்துவலிக்காக அதிகம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அடுத்த நபர் விஸ்வநாதன். இவர் தொழில் விஷயமாகத் தினமும் 200 கி.மீ. வரைக் குண்டும் குழியுமான சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர். கரடுமுரடான அந்தப் பயணம் மட்டுமே போதும், கழுத்துவலி கட்டாயம். ஆனால் அவர், எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவதுபோல், அடுத்ததாக ஒரு தவறு செய்கிறார். பயணத்தின்போது, தலையைச் சாய்த்து, தோளுக்கும் கழுத்துக்கும் நடுவில் செல்போனை வைத்துக் கொண்டு, பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். இப்படியானவர்களை நீங்களும் சாலையில் பார்த்திருப்பீர்கள். குழி இருக்கிறது என்பதற்காக, இட்லித் தட்டில் பணியார மாவை ஊற்றினால் சரிப்படுமா? அதுபோலத்தான் கைக்குள் அடங்க வேண்டிய ‘கைபேசி’யைக் கழுத்தில் அடக்குவதும் சரிப்படாது! திருவாளர் பொதுஜனம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!

அடுத்து, சரியான முறையில் படுத்துக்கொள்ளாததாலேயே பலருக்கும் கழுத்துவலி வருகிறது. அதேநேரம், ‘எப்படித் தூங்கினால் கழுத்துக்கு நல்லது?’ என்ற கேள்விக்கு யாராலும் சரியான விடையைக் கூற முடியவில்லை. “குறட்டை விட்டுத் தூங்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறது” என்று ஒருவர் சொல்லும் பக்குவத்தில் அடுத்தவர் படுத்தால் மறுநாளில் அவருக்குக் கழுத்துச் சுளுக்கிக் கொள்கிறது.

நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது, சத்திரப்பட்டி ஸ்ரீகுமரன் தியேட்டரில் ‘ஒளி விளக்கு’ திரைப்படத்தை, மணல் தரையில் படுத்துக்கொண்டு, அண்ணாந்து பார்த்து, ‘ருக்குமணியே பற பற’ பாடலுக்கு ஜெயலலிதாவின் நடனத்தைக் கண்டு ரசித்த கையோடு வந்த கழுத்துவலிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப டாக்டர் செல்வராஜிடம் ஐந்து நாட்களுக்கு ஊசிபோட்டுக் கொண்டது இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

கழுத்துவலியைக் குறைக்க ‘ட்ராக்ஷன்’ போட்டுக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப் போட்டுக்கொண்ட ஒரு தொழிலதிபர் மரணத்தின் எல்லைக்கே சென்று திரும்பிய சம்பவத்தை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

பெட்டிச்செய்தி:

ஏற்ற தலையணை எது?

தூங்கும் நேரம் முழுவதும் தலையை ஒரே நிலையில் வைத்துக்கொள்வது முடியாத காரியம். எப்படியும் புரள வேண்டியது வரும். அடிக்கடி புரண்டால் கழுத்துத் தசைகள் சோர்வடையும். அதைத் தடுக்கத் தலையணை உதவும். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தும்போதுதான் அது கழுத்துக்குக் ‘கத்தி’யாகிவிடுகிறது. சிலர் தலையணையை மடித்துக் கொண்டு, அதில் கழுத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு தூங்குகின்றனர். இன்னும் சிலர் படுக்கையில் தலையணைக் கடையையே விரித்து விடுகின்றனர். தலைக்கு, நெஞ்சுக்கு, முதுகுக்கு, இடுப்புக்கு, காலுக்கு எனத் தனித்தனியாக தங்கள் இஷ்டத்துக்குத் தலையணை வைத்துக்கொள்கின்றனர். தவிர, தலையணையே இல்லாமல் தரையில் படுத்துக்கொண்டால் கழுத்துவலியே வராது என்றும், கனமான தலையணைதான் நல்லது என்றும் இலவச ஆலோசனைகள் கிடைப்பதுண்டு. பொதுவாக, ‘காற்றுத் தலையணை’ ஆகாது. மிருதுவான, அதிக உயரம் இல்லாத, சிறிய அளவிலான பஞ்சுத் தலையணைதான் எல்லோருக்கும் ஏற்றது. அதைக் கழுத்தோடு சேர்த்துத் தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இங்கே கழுத்து மடங்கக் கூடாது என்பது முக்கியம்.

05.08.2018 காமதேனு இதழுக்குரியது.

====================================================================================================== முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,        Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,     RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

=============================================================================================================

 

 

 

 

 

 

Comments

  1. Superb sir..
    Very clear explanation sir. All youngsters should read this.
    It should be in their hand in printed form

    ReplyDelete
  2. தற்காலத்தில் தலைச்சுமை வேலைகள் இல்லாதபோதிலும் இளைஞர்கள் 75 சதவீதம் பேருக்கு கழுத்து வலி வரக் காரணம் சரியான நிலையில் அமர்ந்து கணினி செல்போன் வேலைக களில் ஈடு படாத தாலும் மணிக்கணக்கில் ஓய்வின்றி வேலையிலும், கணினி விளையாட்டிலும், டெலிவிஷன் பார்ப்பதிலும் மூழ்கி கிடப்பதே காரணம் என்பதை விளக்கியுள்ளீர்கள்.
    இவற்றை சரி செய்து கொள்வது நம் கையில்தான் உள்ளது இது தவிர சாலை பழுது அடைந்து கிடப்பதால் அதில் பயணப்படும் இளைஞர்களுக்கும் கழுத்து வலி அதிகமாக வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    தங்களின் ஆலோசனைப்படி, கழுத்துக்கு சரியானபடி ஓய்வு கொடுத்து சரியான தலையணையில் ஓய்வெடுத்தால் இந்த பிரச்சினையிலிருந்து மருந்தின்றி மீள முடியும் என்ற ஒரு நம்பிக்கை தங்கள் கட்டுரை தெரிவிக்கிறது.

    ReplyDelete
  3. மிகவும் எளிமையாக அருமையான கட்டுரை

    ReplyDelete
  4. பலரும் அவதிப்படும் உடல் சீர்க்கேடுகளை எடுத்துக் காட்டி,அவற்றின் காரணங்களையும்,தவிர்க்கப் பயன்படும் உத்தி களையும் கூறுகிறீர்கள்!பொது மக்களுக்கு கொடுக்கும் health education ithu, நன்றி ஐயா! அந்த நான்கு சூனியக்காரிகள் எவ்வளவு உண்மை!என் மகளுக்கு இதை வாசித்துக் காட்டுவேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?