ஒற்றைத் தலைவலியை ஓரங்கட்டுவோம்!

My Migraine Story: From Fear to Freedom | Association of Migraine Disorders
    

,

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


“ஒற்றைத் தலைவலிக்குத் தனிப் பரிசோதனை எதுவும் இல்லை என்கிறீர்கள். ஆனால், இதனால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தப் பரிசோதனையில் ஆரம்பித்து, இ.இ.ஜி., சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், ‘பெட்’ ஸ்கேன் வரைப் பல்வேறு பரிசோதனைகளைச் செய்கிறார்களே... ஏன்?”

சென்ற வாரம் இந்தத் தொடரைப் படித்த நம் வாசகர்களுக்கு வந்த சந்தேகம் இது. தலைவலிக்கு உறக்கம் குறைவதிலிருந்து ‘உற்சாக பானம்’ குடிப்பதுவரை 300க்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒருவருக்குத் தலைவலி அடிக்கடி வந்தால் அல்லது ஒற்றைத் தலைவலிக்கு ஏற்கனவே கொடுத்த சிகிச்சைகள் பலன் தரவில்லை என்றால், அவருடைய தலைவலிக்கு ‘மைக்ரேன்’ தவிர மற்ற காரணங்கள் இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது மருத்துவ வழக்கம்.

முக்கியமாக, மூளையில் கட்டி, ரத்தக் குழாய் பாதிப்பு அல்லது வேறு ஏதாவது பிரச்சினை இருப்பதாகச் சந்தேகப்பட்டால், நோயாளிக்கு என்ன பிரச்சினை என்பதைத் துல்லியமாகச் சொல்வதற்கு இந்த ஸ்கேன் பரிசோதனைகள் உதவும். குறிப்பாக, இரண்டாம் நிலைத் தலைவலி உள்ளவர்களுக்கு இவை தேவைப்படும்.

ஆனால், ஒற்றைத் தலைவலியைச் சரியாகக் கணிக்க ‘மைக்ரேன் டைரி’ ஒன்றுதான் பலன் தரும். தலைவலியால் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள், தலைவலி தொடங்கிய முதல் மூன்று மாதங்களுக்கு இந்த டைரியைப் பயன்படுத்தினால், ஒற்றைத் தலைவலியைச் சுலபமாகக் கணித்து விடலாம்.

எப்படி?

தலைவலி வரும் நாட்கள், நேரம், வலியின் தன்மை, சாப்பிட்ட மாத்திரைகள், வலி விட்ட நேரம், சாப்பிட்ட உணவு, உறங்கிய நேரம், அமைந்த சூழல் போன்ற விவரங்களை அந்த டைரியில் குறித்து வர வேண்டும். பெண்களாக இருந்தால், மாதச் சுழற்சி, கருத்தடை மாத்திரைகள்/ ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது உள்ளிட்ட விவரங்களை ஒன்று விடாமல் குறித்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தமுறை தலைவலி வரும்போது குடும்ப மருத்துவரிடம் அதைக் காண்பித்தால், உங்களுடைய பிரச்சினை ஒற்றைத் தலைவலியா, இல்லையா; ஒற்றைத் தலைவலிதான் என்றால், என்ன காரணத்தால் வந்தது என்னும் விவரங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். அதைத் தொடர்ந்து நீங்கள் சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

‘பத்து அம்சத் திட்டம்’ தெரியுமா?


ஒற்றைத் தலைவலி வராதிருக்க அதன் ‘எதிரிகளை ஓரங்கட்டுவதுதான்’ சிகிச்சையின் முதல்படி. அதற்கு நவீன வாழ்வியலில் நாம் தொலைத்ததைத் திரும்பப் பெற வேண்டும். அதற்கென்றே உருவானதுதான் இந்தப் ‘பத்து அம்சத் திட்டம்’: 1. அந்நிய உணவுக்கு அடிமையாக வேண்டாம். 2. செயற்கை உணவும் ஆகாது; செயற்கை மணமும் கூடாது. 3. பசித்ததும் புசியுங்கள். 4. பாரம்பரிய உணவுக்கே முன்னுரிமை. 5. பணியில் பதற்றமும் வேண்டாம்; பரபரப்பும் வேண்டாம்; நிதானம் பேணுங்கள். 6. களைப்பைக் கழற்றிப் போடுங்கள். 7. உபரிச் சத்தமா, ஒதுங்கிவிடுங்கள். 8. ஆறு மணி நேரம் உறக்கம் முக்கியம். 9. தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். 10. அன்பும் அரவணைப்பும் மன அமைதிக்கு ஆதாரம்.

கைகொடுக்கும் டிரிப்டான்!

அப்படியும் தலைவலி தொடருமானால், மருத்துவரிடம் காண்பித்துத் தகுந்த சிகிச்சை பெற வேண்டும். ஒற்றைத் தலைவலிக்கு ‘டிரிப்டான்’ (Triptan) என்னும் மருந்துதான் கடந்த கால் நூற்றாண்டு காலமாகக் கைகொடுக்கிறது. இந்த மருந்து, ஒற்றைத் தலைவலியின்போது தலையில் விரிந்த நிலையில் இருக்கும் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைத்துத் தலைவலியைக் குறைக்கிறது. வெயில் நல்லதுதான். ஆனால், அது எல்லோருக்கும் ஆகாதல்லவா? அதுமாதிரி ரத்தக்கொதிப்பு, இதயநோய், பக்கவாதம் பாதிப்புள்ளவர்கள் இந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது.

கர்ப்பிணிகள் கவனம்!

பொதுவாகவே, கர்ப்பிணிகள் மருத்துவர் கூறாமல் எந்த ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த தடுப்புவிதி. சோதனையாக, கர்ப்பிணிகளுக்கு முதல் மும்மாதங்களில் ஒற்றைத் தலைவலி அதிகம் படுத்திவிடும். அப்போது டிரிப்டான் மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இந்த மருந்துகளால் கரு கலைய வாய்ப்புள்ளது என்பதால் இந்த எச்சரிக்கை! முடிந்த வரை சாதாரண தலைவலி மாத்திரைகளைச் சாப்பிட்டும், சரியான வாழ்வியல் வழிகளிலும் தலைவலியைச் சமாளித்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

தடுப்பது எப்படி?

ஒற்றைத் தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் டிரிப்டான் சிகிச்சையோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. தடுப்பு சிகிச்சையும் தேவை. இதில் நான்கு வகை மாத்திரைகள் உண்டு. சோம்பல்படாமல் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால், பறக்கும் மயிலைக் கண்ட பாம்பைப்போல் ‘மைக்ரேன்’ மறைந்துவிடும்.


தலைவலி பல மாதங்களுக்குத் திரும்பவில்லை என்றால், தடுப்பு மாத்திரைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ளவும் முடியும். அதேநேரம், ஒட்டு மொத்தமாகவும் நிறுத்திவிடக் கூடாது. அப்படி நிறுத்தினால், விலாசம் சரியில்லாத கூரியர்போல் ஒற்றைத் தலைவலி திரும்பிவிடும்.

மாற்று மருத்துவம் உதவுமா?

இதையும் சொல்லிவிடுகிறேன்: மைக்ரேனுக்கு மாத்திரைதான் சமயசஞ்சீவி என்பதில்லை. என் பள்ளித் தோழி ஒருத்திக்குக் கோபக்காரக் கணவர். அவர் குடித்துவிட்டு வீட்டில் கத்த ஆரம்பித்தால்,  தோழிக்கு ‘மைக்ரேன்’ பகல் முழுவதும் படுத்திவிடும். அவளுக்கு அலோபதி மாத்திரைகள் பலவும் அலர்ஜி. அதனால் சிகிச்சை செய்ய சிரமப்பட்டேன். கடைசியில் மாற்று மருத்துவம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அவளுக்கு அக்குபங்சரும் அக்குபிரஷரும் கைகொடுத்தன.

இதுபோல், சித்தா, ஹோமியோபதி, யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள், மன அமைதிப் பயிற்சிகள், உளவியல் பயிற்சிகள்….. இப்படியான ஒருங்கிணைந்த மருத்துவத்தால் ஒற்றைத் தலைவலியை வென்றவர்களும் இருக்கிறார்கள். 


நவீன சிகிச்சை வந்தாச்சு!

ஒற்றைத் தலைவலியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஊசி, மாத்திரை போட்டும்கூட உடனே நிவாரணம் கிடைக்காதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்கள் வலியால் அலறித் துடித்து அடுத்தவர்களையும் பதறவைத்துவிடுவார்கள். இவர்களுக்கென்றே ஒரு நவீன சிகிச்சை அயல் நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. அது 'நியூரோமாடுலேஷன் (Neuromodulation) சிகிச்சை'.

முன்நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் தீப்பெட்டி சைஸிலும், கழுத்தில் அழுத்தும் வகையில் சிறிய ‘ஹேர் டிரையர்’ சைஸிலும் இதற்கான கருவிகள் கிடைக்கின்றன. நோயாளியின் தேவையைப் பொறுத்து மருத்துவர்கள் இதைத் தேர்வு செய்கிறார்கள். செயல்முறையை விளக்கியதும் நோயாளியின் கையில் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே ஒற்றைத் தலைவலியை ஒடுக்கிவிடுகிறார்கள்.

எப்படி இது சாத்தியம்?

பொதுவாக, நம் உடலில் எங்கு வலி தெரிய வேண்டும் என்றாலும், அங்குள்ள நரம்புகள்தான் வலி உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நரம்புகளின் செயல்பாட்டை மின்காந்த அதிர்வுகள் மூலம் தற்காலிகமாக நிறுத்திவிட்டால், நமக்கு அப்போது வலி எதுவும் தெரியாது. இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான், 'நியூரோமாடுலேஷன் சிகிச்சை'.

ஒற்றைத் தலைவலி தொடங்கியதுமே இந்தக் கருவியை முன்நெற்றியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் அல்லது கழுத்தில் நரம்பு செல்லும் இடத்தில் இந்தக் கருவியால் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது கருவியில் மின்காந்த அதிர்வுகள் உற்பத்தியாகி நரம்புகளுக்குப் பாயும். அவை வலி நரம்புகளை 'உறங்க'ச் செய்து தலைவலியை விரட்டிவிடும். 


இந்த சிகிச்சை இந்தியாவுக்கு இப்போதுதான் இறக்குமதி ஆகிறது. அடுத்த சில ஆண்டுகளில் தலைவலி உள்ளவர்களுக்கு ‘நெற்றிக்கண்’ முளைத்தால் ஆச்சரியமில்லை. ஆம், வாசகரே! மாடுலேஷன் கருவியை நெற்றியில் ஒட்டிக்கொள்ளப் போவதைத்தான் இப்படிச் சொல்கிறேன்.

மாத்திரையோ… மாடுலேஷனோ… பெயரில் என்ன இருக்கிறது? ஒற்றைத் தலைவலியின் கொட்டம் அடங்கினால், சரி!


29.07.2018 காமதேனு இதழுக்குரியது.

மைக்ரேன் டைரி!

நாள் 

 

தலைவலி

தொடங்கிய நேரம்

 

தலைவலி விட்ட நேரம்

 

 

 

டிக் செய்க

 

டிக் செய்க

வலி எந்தப் பக்கம்?

ஒரு பக்கம் மட்டும்

 

இரண்டு பக்கமும்

 

வலியின் தன்மை

அழுத்துவதுபோல்

 

கொத்துவதுபோல்

 

குமட்டல்/வாந்தி வந்ததா?

ஆம்

 

இல்லை

 


உணவு விவரம்
    
உடற்பயிற்சி விவரம்   

வலி வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
    
எடுத்துக்கொள்ளும் மருந்துகள் விவரம்    

=====================================================================

முகவரி:
Dr. G. Ganesan, MBBS.,          Ganesh Hospital,
53/19-A, Angiah Raja Street,         RAJAPALAYAM-626 117
VIRUDHUNAGAR – DT                    Mobile: 99524 34190      
e-mail: gganesan95@gmail.com
https://kuganesanmedicalarticle.blogspot.com/



Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?