கழுத்தில் வலி வந்தால் மாரடைப்பா?

 

 

 Is Neck Pain a Sign of a Heart Attack: A Comprehensive Guide

 

 

 


 

 

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

     அந்தத் தொழிலதிபருக்கு 50 வயது. வெளியூர்களுக்கு அடிக்கடி காரில் பயணம் செய்வார். டிரைவர் இருந்தால்கூடப் பாதி தூரம் அவரும் கார் ஓட்டுவார். அதில் ஒரு சுகம் அவருக்கு! ஒருநாள் காலையில் அவர் எழுந்திருக்கும்போது கழுத்தைத் திருப்பமுடியவில்லை. வலி கொன்றது. அவர் அதை ‘சுளுக்கு’ என நினைத்துக் கொண்டார்; தைலங்களைத் தடவினார்; களிம்புகளைப் பூசினார்; தலையணையை மாற்றினார்; எண்ணெய் மசாஜ் செய்தார். எதிலும் பலனில்லை.

என்னிடம் வந்தார். எக்ஸ்-ரேயில் எலும்பில் பிரச்சினை தெரிந்தது. வழக்கமான வலிக் கொல்லிகளுடன் ‘டிராக்ஷன்’ போட்டுக்கொள்ளச் சொன்னேன். வலி விடை பெற்றது. அதற்குப் பிறகு  அவர் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால், அவருக்குக் கழுத்துவலி அவ்வப்போது வருவதாகவும், அப்போதெல்லாம் வீட்டில் அவராகவே டிராக்ஷன் போட்டுக்கொள்வதாகவும் பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது சொன்னார். 

அடுத்த சில வாரங்களில் என்னை அலைபேசியில் அழைத்தார். “டாக்டர்! நடுராத்திரியில் இருந்தே கழுத்தில் கடுமையான வலி! காலையில் வழக்கம்போல் டிராக்ஷன் போட்டுக்கொண்டேன். ஆனாலும், வலி விட்டபாடில்லை. என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “உடனே மருத்துவமனைக்குக் கிளம்பி வாருங்கள்” என்றேன்.

அரை மணி நேரம் கழித்து, அவருடைய டிரைவர் அலைபேசினார். “டாக்டர்! உங்கள் மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தபோதே முதலாளிக்கு வலி அதிகமாகி, மயங்கி விட்டார். அதனால் வழியில் உள்ள ‘பெரிய’ மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டேன். இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்….” என்று அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.

விசாரித்ததில், அன்றைக்குத் தொழிலதிபருக்கு வந்தது வழக்கமான கழுத்துவலி இல்லை. இந்த முறை அந்த வலி இடது கைக்கும் சென்றிருக்கிறது. அது இதய வலி; மாரடைப்புக்கான அறிகுறி. உடனே கவனிக்க வேண்டும். இதை அறியாமல், அவர் டிராக்ஷனில் ஈடுபட்டதால் நிலைமை கைமீறிவிட்டது; மாரடைப்பு மோசமாகி, மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார். அதற்குப் பிறகு வீட்டில் உள்ளவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பிரபல மருத்துவமனையில் இரண்டு வாரம் ‘ஐசிசியூ’வில் தங்கி, இரண்டு ‘ஸ்டென்டு’கள் வைத்த பிறகு உயிர் பிழைத்தார்.

இதை சொல்வதற்குக் காரணம் இதுதான்: ‘மாரடைப்பு வலி’ மார்பில்தான் வர வேண்டும் என்பதில்லை. கழுத்து, தாடை, பல், முதுகு, இடது தோள்பட்டை, இடது கை எனப் பல இடங்களில் அது வரலாம். எனவே, நாற்பது வயதுக்கு மேல் கழுத்தில் வலி வந்தால், கழுத்துக்கான பரிசோதனைகளோடு இதயத்தையும் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

இப்படிச் சொல்லிவிட்டதால், கழுத்தில் வலி வரும்போதெல்லாம்  ‘இது மாரடைப்போ?’ எனப் பயந்து, பதற வேண்டாம்! கரும்பு என்றால் அதில் கட்டாயம் கணு இருக்கும். அதற்காக கணு இருப்பதையெல்லாம் கரும்பு என்று கணிக்கமுடியாது! அப்படித்தான், கழுத்துவலி எல்லாமே மாரடைப்பாக இருப்பதில்லை!

மாரடைப்பு வலி எப்படி இருக்கும்?

வந்திருக்கும் வலி கழுத்துவலியா, மாரடைப்பு வலியா எனத் தெரிந்துகொள்ள ஓர் எளிய வழி சொல்கிறேன். கழுத்தைப் பல்வேறு திசைகளில் அசைத்துப் பாருங்கள். அந்த வலி அதிகமானாலோ, குறைந்தாலோ, கழுத்தை இறுக்கிப் பிடித்த மாதிரியான உணர்வு தளர்ந்தாலோ அது கழுத்துத் தசைகள் கொடுத்த வலியாகத்தான் இருக்கும்.

கழுத்தின் அசைவுக்கும் வலிக்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியானால், அடுத்த அறிகுறிகளைக் கவனியுங்கள். இடது பக்கக் கழுத்தில் மட்டும் வலி அதிகம்; இடது கைக்கு வலி பரவுகிறது; உடல் வியர்க்கிறது; படபடப்பாக இருக்கிறது என்றால், அது மாரடைப்பு வலியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உடனே மருத்துவரைப் பாருங்கள்.

அமிலமும் ‘ஆஞ்சைனா’வும்!

நாற்பது வயது நிரம்பிய ஓர் அம்மணி, காலையில் எழுந்ததிலிருந்து தொண்டையெல்லாம் எரிகிறது என்றும், அது கழுத்தைப் பிடிக்கிறது என்றும் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். எக்ஸ்-ரேயில், கழுத்து எலும்புகளில் அவர் வயதுக்குரிய பிரச்சினை தெரிந்தது. என்றாலும், வயிற்றை எண்டோஸ்கோப்பி எடுப்பது அவசியம் என்றும் தோன்றியது. அப்படிப் பார்த்ததில், அவருக்கு உணவுக் குழாயிலும் பிரச்சினை இருப்பது தெரிந்தது. இரைப்பை அமிலம் மேலேறி வந்து தொண்டையையும் (GERD) கழுத்தையும் பிடிப்பது புரிந்தது. அதற்கு அளித்த சிகிச்சையில் அவருக்குக் கழுத்துவலி தீர்ந்தது.

அதே அம்மணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே அறிகுறிகளுடன் மறுபடியும் வந்தார். இந்த முறை இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தேன். இதயத்தில் ‘ஆஞ்சைனா’ (Angina) எனும் பாதிப்பு தெரிந்தது. ஆக, கழுத்துவலிக்கு மாத்திரை சாப்பிடும் முன்பு இதயம், இரைப்பை… இந்த இரண்டையும் ‘நலம்’ விசாரித்துக்கொள்ளுங்கள்.

‘சுளுக்கு’ எப்படி ஏற்படுகிறது?

“படுக்கப்போகும்போது கழுத்து நன்றாகத்தான் இருந்தது. காலையில் எழுந்திருக்கும்போது கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பமுடியவில்லை. இது ஏன்?” - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதை ‘சுளுக்கு’ என்று பொதுவாகச் சொல்வார்கள். கழுத்துக்கென்று ஒரு வளைவு இருக்கிறது. அந்த வளைவுப் பாதிக்கிற மாதிரி அசாதாரணமான நிலையில், நீண்ட நேரம் படுத்தால், தசைகள் இறுகிவிடும். அதன் விளைவுதான் சுளுக்கு!

எலும்பு இடைச் சவ்வு வீங்குவது ஏன்?

‘கழுத்து எலும்புகளில் சவ்வு வீங்கிப்போனால் கழுத்தில் வலி வரும்’ என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இதற்கு ‘சர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical spondylitis) என்பது மருத்துவப் பெயர். முன்பெல்லாம் இது ஒரு வம்சாவளி நோயாகப் பார்க்கப்பட்டது; முதுமை நோயாக அறியப்பட்டது. இன்றைய நவீன வாழ்வியலில் இது ஓர் இளம் பருவ நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

கழுத்து எலும்புகளுக்கு இடையில் ‘குஷன்’ மாதிரி வட்டத் தட்டுகள் (இடைச் சவ்வுகள்) இருக்கின்றன. தலையை இடித்துக்கொண்டால், அந்த அதிர்ச்சியை உடலுக்குக் கொண்டு செல்வதைத் தடுப்பவை இவைதான்; கழுத்து அசையும்போது எலும்புகள் உரசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதும், எலும்புகளின் இடைவெளியில் இருந்து தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களுக்குப் பிரிந்து செல்லும் நரம்புகள் நசுக்கப்படுவதைத் தடுப்பதும் இவையே.

கழுத்துத் தசைகளை நாம் தவறாகப் பயன்படுத்தும்போதும், சென்ற வாரம்  சொன்னதுபோல் கழுத்துக்குப் பல வழிகளில் இடையூறு செய்யும்போதும், 60 வயதில் ஆரம்பிக்க வேண்டிய கழுத்துவலி 30 வயதுக்கு முந்திவிடுகிறது. குறிப்பாக, எலும்புகள் தேய்ந்து அங்கே ‘ஆஸ்டியோபைட்’ (Osteophyte) என்னும் முண்டுகள் முளைப்பதும், இடைத்தட்டுகள் துருப்பிடித்தத் தகடுபோல் திறன் இழப்பதும் இந்த வலிக்கு முக்கியக் காரணங்கள்.

மூப்படைவது, புரதம் குறைவது, கால்சியம் காலியாவது, வைட்டமின் டி பற்றாக்குறை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை கழுத்துவலியை மோசமாக்கும் ‘மோகினிகள்’. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்தாலோ, நீரிழிவு உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினாலோ எரியும் மத்தாப்பால் சரவெடியைக் கொளுத்துவதுபோல் இந்த நோய்க்குக் குதூகலம் கூடிவிடும்.

அப்போது எலும்புகளுக்கு இடையில் இருக்கிற இடைவெளி குறுகிவிடும். அதன் வழி செல்லும் நரம்புகள் நசுக்கப்படும். நாளாகநாளாக இடைத்தட்டுகள் நரம்புகளை நோக்கி நகரக்கூடும். இதைப் பேச்சு வழக்கில் ‘ஜவ்வு விலகிப்போச்சி’ என்பார்கள். சிலருக்குக் கழுத்தில் அடிபடும்போது இம்மாதிரி ஆவதுண்டு. அப்போது, பாதிப்புகள் பலப்படும். கழுத்துவலியுடன், மேற்கையில் குடைச்சல், கை முழுவதிலும் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு, கைவிரல்கள் மரத்துப்போவது எனப் பல்வேறு அவஸ்தைகள் அணி சேரும். அதனால் சரியாகத் தூக்கம் பிடிக்காது. கடைசியில், கைகள் பலவீனம் ஆகும். ஆனால், கழுத்துவலி உள்ளவர்கள் அதுவரைக்கும் காத்திருக்கக் கூடாது; ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும்.

கழுத்தில் மட்டுமே வலி என்றால், அதைக் குடும்ப மருத்துவரே சரிப்படுத்திவிடுவார். வலி கழுத்திலிருந்து கைக்கு இறங்குகிறது என்றால், எலும்பு மூட்டு மருத்துவர் அல்லது நரம்புநல மருத்துவரின் ஆலோசனையும் முறையான சிகிச்சையும் தேவை.

அது என்ன ‘முறையான’ சிகிச்சை? அடுத்த கட்டுரையில் அறிவோம்.

 

பெட்டிச் செய்தி:

கழுத்தில் நெரி கட்டினால்?

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பிகள் வீங்கினால், காய்ச்சலுடன் கழுத்தில் நெரிகட்டும்; வலிக்கும். காசநோய், புற்றுநோய் பாதிப்புகளின்போதும் இதேபோல் நிறைய நெரிக்கட்டிகளுடன் கழுத்து வலிப்பதுண்டு. அதிக காய்ச்சலுடன், கழுத்தை அசைக்கவே முடியவில்லை என்றால், அதை உடனடியாக கவனிக்க வேண்டும். அது மூளைக் காய்ச்சலாக இருக்க வாய்ப்புண்டு. வாந்திக்குத் தரப்படும் சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் கழுத்து இழுத்துக்கொண்டு வலிப்பதுண்டு.

12.08.2018 காமதேனு இதழுக்குரியது.

முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,        Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,     RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                Mobile: 99524 34190      

e-mail:gganesan95@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. எளிதாக புரிந்து கொள்ள உதவும் கட்டுரை. உடன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தக்க வைத்தியம் பார்க்க அறிவுறுத்தல் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?