ஒற்றைத் தலைவலி : எதிரிகள் அறிவோம்!

Horrified, he's 8 Danger Spot Exchange Mie and Chocolate - Kakakoa Chocolate
    


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


என் அப்பாவும் அம்மாவும் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தனர். நான் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்ததும், ராஜபாளையத்தில் கிளினிக் ஆரம்பித்துவிட்டேன். அதனால், பெற்றோரையும் என்னுடன் அழைத்துக் கொண்டேன். அப்பா பகலில் கிளினிக் முன்வராந்தாவில் அமர்ந்துகொள்வார். அங்கு வருவோரிடம் ‘நம் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள்’ பற்றி நிறையப் பேசுவார்.

உள் நோயாளிகளிடம் நோயின் தன்மையை அறிந்து ஆறுதல்படுத்துவார். அப்போதெல்லாம் அவருடைய பேச்சில் ஓர் ஆதங்கம் தெரியும்.  ‘நவீனம், நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் உணவிலும் உடையிலும் நம் அன்றாடங்களைத் தொலைத்துவிட்டு, காய்ச்சல், தலைவலியில் தொடங்கி, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்று வரை எல்லா நோய்களையும் கூட்டாளியாக்கிக் கொள்கிறார்களே!’ என வருத்தப்படுவார்.

‘வயிறு கொள்ள வரகரிசிச் சோறு சாப்பிட்டப்போ வராத நோயெல்லாம், வெள்ளை அரிசிச் சோற்றை அளந்து சாப்பிட்டாலும் வரிசையில் வந்து நிக்குதே!’ என்பார்.‘எங்க காலத்திலே தாகம் எடுத்தா கோலி சோடாதான் குடிப்போம். தாகம் தீரும். இப்போ பெப்ஸி, ஃபேண்டான்னு பாட்டில் பாட்டிலா குடிக்கிறாங்க. ஆனாலும் தாகம் தீரலே… தலைவலி வருதுன்னு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க. இது தேவையா?’ எனப் புலம்புவார்.  

என் அப்பா மட்டுமில்லை, நலவாழ்வில் அக்கறை கொண்ட தாத்தா, பாட்டிகள் எல்லோரும்  கால் நூற்றாண்டுக்கும் மேலாக இப்படிப் புலம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தொன்மை மறந்த இளைய தலைமுறை இந்தப் புலம்பல்களைப் புறந்தள்ளுவதால்தான், வாழ்வின் வசந்தங்களை அனுபவிக்க வேண்டிய வயதில், வியாதிகளோடு அல்லல்படுகின்றனர்.

நலவாழ்வு நலிவடைதற்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற ‘அசுரர்கள்’ வந்துதான் தாக்க வேண்டும் என்பதில்லை. ஒற்றைத் தலைவலி போன்ற ‘சகுனிக’ளே போதும், நம் ஆரோக்கிய சாம்ராஜ்ஜியம் சரிந்துவிடும். இத்தனைக்கும் இதைக் கொண்டு வந்து சேர்க்கும் எதிரிகள் எளியவர்கள்! அவர்களைப்  பற்றிய புரிதல்தான் முக்கியம். ஒற்றைத் தலைவலியை சுலபமாக ஓரங்கட்டலாம்.
 
ஆபத்தாகும் நூடுல்ஸ்!   


என் அனுபவத்தில், சின்ன வயதில் இடியாப்பம்தான் பிடிக்கும் என்று லஞ்ச் பாக்ஸ் நிறைய பள்ளிக்கு எடுத்துச் சென்று அள்ளிச் சாப்பிட்ட குழந்தைகளில் பலர், பதின்பருவத்தில் நுழைந்ததும் நூடுல்ஸ்தான் பிடிக்கும் என்று கட்சியும் காட்சியும் மாறிய பிறகு, ஒற்றைத் தலைவலியால் துடித்துப்போய் நேரங்கெட்ட நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள என்னிடம் ஓடி வந்திருக்கின்றனர். என்ன காரணம்?

இந்திய உணவு இடியாப்பத்தில் எந்த ரசாயனமும் இல்லை! ஆனால், சீன உணவு நூடுல்ஸில் மோனோசோடியம் குளுட்டமேட் எனும் சுவையூட்டி சேர்க்கப்படுகிறது. இதுதான் நம்மவர்களைத் திரும்பத் திரும்பச் சாப்பிடச் சொல்கிறது. மேலும், குழந்தைகளைக் கவர்வதற்காகப் பல நிறங்களில் நூடுல்ஸ் தயாரிக்கின்றனர். அந்த நிறங்களுக்கு அடிப்படை செயற்கை ரசாயனங்கள். அவை நம் ஆரோக்கியத்துக்கு எதிரிகள். அது தெரியாமல் அவற்றுக்கு அடிமையாகிவிட்டது இன்றைய தலைமுறை.

நூடுல்ஸ், பெருநகரங்கள் என்றில்லாமல் பட்டி தொட்டிவரை இப்போது தேசிய உணவாகிவிட்டது. இது உடலெங்கும் புகுந்து ஒற்றைத் தலைவலியில் தொடங்கி புராஸ்டேட் புற்று வரை அட்டூழியம் செய்கிறது. அந்நிய உணவுச் சந்தை தொடங்கிவைத்த ஆபத்துக்குச் சான்று இது.

குழந்தைகளுக்குப் பிடித்த அடுத்த அயிட்டம் சாக்லேட்! இளைய வயதினருக்கு சாஸ், சீஸ்! இவற்றில் ‘டைரமின்’ ஆதிக்கம் அதிகம். இந்த ரசாயனம் ‘மோனோஅமைன் ஆக்ஸிடேஸ்’ எனும் என்சைமால் குடலில் சிதைக்கப்பட வேண்டும். சிலருக்கு இந்த என்சைம் குறைவாகச் சுரக்கும். அப்போது டைரமின் முறையாகச் சிதைக்கப்படாமல் அப்படியே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இதன் விளைவாக, தலைவலி படுத்தி எடுக்கும். அது ஒற்றைத் தலைவலி!
கலர் கலராக ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், பால் தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூப்புகள், ஊறுகாய்கள்… இப்படிப் பதின்பருவத்தினரைக் குறிவைத்துத் தயாரிக்கப்படும்  பலதரப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம்/நைட்ரேட் கலக்கப்படுகிறது. இது ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.

பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி அழகு பார்த்தபோதெல்லாம் ஒற்றைத் தலைவலி ஒதுங்கித்தான் இருந்தது. உடலுக்கு, உடைக்கு, படுக்கைக்கு எனத் தனித்தனியாக வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளிக்கத் தொடங்கியதும், ஒற்றைத் தலைவலியும் அந்த வாசனைக்கு மயங்கி, அழையாத விருந்தாளியாக அவர்களோடு அமர்ந்துகொண்டது.
நீரிழிவு உள்ளவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வருகிறது என்றால் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ரத்தச் சர்க்கரை குறைந்துபோவது. மற்றொன்று, அவர்கள் சர்க்கரைக்குப் பதிலாகக் காபியில் கலந்து குடிக்கும் ‘அஸ்பார்டம்’ எனும் செயற்கைச் சுவையூட்டி. 

When you Eat Is As Important As What You Eat - Healthians

 பசியைக் கவனி!


நேரத்துக்குச் சாப்பிடாமல் பசியோடும் களைப்போடும் வேலை பார்த்தால் ஒற்றைத் தலைவலி எட்டிப் பார்க்கும். இன்றைய வாழ்வியலில் வீட்டுப் பெண்களிடம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுச் சாப்பிடலாம்; ‘சீரியல்’ பார்த்துவிட்டுச் சாப்பிடலாம்; வாட்ஸ் - அப்பில் ‘சேர்’ செய்து விட்டுச் சாப்பிடலாம் என்று பசியைப் புறக்கணிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

அடுத்து, இப்போதெல்லாம் பணியில் சேரும்போதே, ‘கையில் உள்ள வேலையை முடித்து விட்டுத்தான் சாப்பிடப் போவேன்’ என்று சபதம் செய்ய வேண்டிய அளவுக்கு நேர நெருக்கடி. இதனால் பசிக்கிற வயிற்றைக் கவனிக்காமல் காலம் கடத்துகின்றனர். அல்லது தேவைக்குச் சாப்பிடாமல் கேன்டீனில் கிடைத்ததைக் கிள்ளிச் சாப்பிடுகின்றனர். அப்போது, மூளையின் ஒரு பகுதி அடுத்தவர்களுக்குக் கேட்காதபடி அலறுகிறது. அது ஒற்றைத் தலைவலி.


மனஅழுத்தம் ஒற்றைத் தலைவலியை உண்டாக்குவதுண்டு. ஆனாலும் மனஅழுத்தம் உள்ளவர்களுக்கெல்லாம் அது வர வேண்டும் என்பது கட்டாயமி்ல்லை. நல்ல ஆரோக்கியத்துக்குத் தேவை சரியான உறக்கம். ஆனால், இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்துவிட்டுப் பகலில் தள்ளாடும் இளைய தலைமுறையைத்தான் இப்போது அதிகம் பார்க்கிறோம். இவர்கள் மட்டுமல்ல, நாகரிக வாழ்வியலும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகளும் அநேகரின் உறக்க நேரத்தை விழுங்கிக் கொள்வதால், பூனை இல்லாத வீட்டில் எலி பயமில்லாமல் நுழைவதுபோல் ஒற்றைத் தலைவலி அவர்கள் பக்கத்திலேயே வந்து படுத்துக்கொள்கிறது.   

சிலருக்குக் குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதும், குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போதும் ஒற்றைத் தலைவலி வருகிறது. தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும்போது ஒற்றைத் தலைவலி வருவது இப்படித்தான். பெண்களுக்கு மாதவிலக்கின்போதும் அது நின்றுபோனபோதும் இது அதிக தொல்லை கொடுப்பதுண்டு. சில பூக்களின் வாசனை, பெட்ரோல்/டீசல் புகை இந்தத் தலைவலியைத் தூண்டும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் இது வரக்கூடும். உதாரணம்: கருத்தடை மாத்திரைகள். காதைக் கிழிக்கும் சத்தங்கள், மினுங்கும் விளக்கு வெளிச்சங்கள், பருவகால மாற்றங்கள் எனப் புறச்சூழல்களும் ஒற்றைத் தலைவலியை வரவேற்பவையே!

இப்போது புதிதாக ‘வாரக் கடைசி ஒற்றைத் தலைவலி’ வருகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் பிஸியாக இருந்துவிட்டு, கடைசி நாளில் ஓய்வெடுக்க விரும்பும்போது, மூளை தன் வழக்கமான நடைமுறைப் பழக்கத்திலிருந்து விலகிவர மறுப்பதால், இந்தத் தலைவலி வருகிறது. விமானப் பயணிகளுக்கு நேரும் ‘ஜெட்லாக்’ மாதிரிதான் இது.


சரி, ஒற்றைத் தலைவலியை எப்படிக் கண்டுபிடிப்பது? உண்மையைச் சொன்னால், இதற்கெனத் தனிப் பரிசோதனை எதுவும் இல்லை. பதிலாக, ‘மைக்ரேன் டைரி’ என்று ஒரு டைரி இருக்கிறது. அதை வைத்துத்தான் அநேகருக்கு இந்த நோயைக் கணிக்கிறோம். அது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெட்டிச் செய்தி:

வேண்டாமே!


மூன்றாம் வகுப்பில் படிக்கும் பையன், ‘வயிற்றை வலிக்குதும்மா!’ என்று சொன்னால், பாடம் படிக்க மலைத்துக்கொண்டு, சாக்குப்போக்குச் சொல்கிறான் என நினைக்க வேண்டாம். அவனுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்ப நிலையில் இருக்கலாம். இந்தியாவில் 100ல் ஒரு குழந்தைக்கு ஒற்றைத் தலைவலி இருக்கிறது. 12 வயது வரை இது ஆண் குழந்தைகளுக்கே அதிகம். அதற்குப் பிறகு இது பெண்களையே அதிகம் ‘பிடித்து’க்கொள்கிறது. குழந்தைகளுக்கு இது வரும்போது, வயிற்று வலிதான் பிரதானமாக இருக்கிறது. இது தெரியாமல், பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் வயிற்றில் வலி என்று சொல்லிவிட்டால் போதும், உடனே வயிற்று வலி மாத்திரையையும், குடல்புழு மாத்திரையையும் கொடுத்துவிடுவார்கள். குழந்தைக்கு வயிற்று வலி வந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சரி செய்ய வேண்டும். சுயமருத்துவம் வேண்டாம்!

23.07.2018 காமதேனு இதழுக்குரியது.

முகவரி:
Dr. G. Ganesan, MBBS.,          Ganesh Hospital,
53/19-A, Angiah Raja Street,         RAJAPALAYAM-626 117
VIRUDHUNAGAR – DT                    Mobile: 99524 34190      
e-mail: gganesan95@gmail.com







Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?