சர்க்கரை நோய் : கர்ப்பிணிகள் கவனம்!

 

 

சர்க்கரை நோய் அறிவோம் - 4

 


 

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

 


சர்க்கரை நோய் : கர்ப்பிணிகள் கவனம்!

 

கிலா இளம் மனைவி. என் நண்பரின் மருமகள். சிறு வயதிலிருந்தே குண்டு உடம்பு. சமீபத்தில் அவள் கர்ப்பிணி ஆனாள். தற்போது மகப்பேறு மருத்துவரின் கவனிப்பில் இருக்கிறாள். ஐந்து மாதங்கள் வரை ‘மசக்கை வாந்தி’ உள்ளிட்ட எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்ததால், கண்டதைத் தின்று, தாய்மையின் கனவுகளில் சந்தோஷமாக இருந்தாள். ஆறாம் மாதம் ஆரம்பித்தது அந்தப் பிரச்சினை. அவளுக்கு ரத்தச் சர்க்கரை திடீரென்று கூடிவிட்டது. மருத்துவர், “உங்களுக்குச் சர்க்கரைநோய் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. இனிமேல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்ததும் பயந்துபோய் என்னிடம் வந்தாள்.

“அங்கிள், என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு எப்படிச் சர்க்கரைநோய் வந்திருக்கும்? இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லையே! அப்பா, அம்மாவுக்கும் சர்க்கரைநோய் இல்லை! லேப் ரிப்போர்ட்டில்தான் எனக்குச் சந்தேகம் உள்ளது” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தவள், என்னிடம் மறுபடியும் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டாள். அவளுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பது உறுதியானது; அதனால், அச்சம் அதிகமாகியது. பதற்றத்துடன் என்னைப் பார்த்தாள்.

“பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் இப்படிச் சர்க்கரைநோய் வருவதுண்டு. இதுவும் ஒரு வகையில் ‘ப்ரிடயாபிடிஸ்’ எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலைதான். உனக்கு இது வந்த காரணம் உன் குண்டு உடம்பும் ‘குண்டோதர’ச் சாப்பாடும்தான். உணவைக் கட்டுப்படுத்தினால் இதைச் சரிசெய்து விடலாம்” என்று அவளுக்குத் தைரியம் சொன்னேன்.

இன்றைய நவீன வாழ்க்கைமுறையானது பெண்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுத்திருக்கும் ‘கொடை’களுள் இந்தத் திடீர் சர்க்கரைநோய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இப்போதெல்லாம் பெண்கள் உடலுழைப்பு குறைந்த அலுவல் பணிகளுக்குச் செல்வது அதிகமாகிவிட்டது. அவர்களின் உணவுமுறையும் மாறிவிட்டது. அவர்களுக்கு வீட்டையும் கவனித்துக்கொண்டு, அலுவல் பணிகளையும் கவனிக்க வேண்டிய நித்தியக் கடமைகள் நிறைய இருப்பதால், சுமை கூடுகிறது. பல பெண்களுக்குத் தேவையான ஓய்வும் கிடைப்பதில்லை; உறக்கம் இருப்பதில்லை. அலுவலகத்தில் மட்டுமல்லாமல், வீட்டிலும் குடும்பத்திலும் மன அழுத்தம் உள்ளிட்ட பலவித அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. மாறிவிட்டஇச்சூழல்களால் இப்போதைய பெண்களுக்கு ஹார்மோன்கள் தப்பாட்டம் போட, கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் கால்வாசி கர்ப்பிணிகளுக்குப் புதிதாகச் சர்க்கரைநோய் வந்திருக்கிறது என்ற செய்தி நம்மைக் கலங்கடிக்கிறது.

சர்க்கரைநோயில் மூன்று வகை

பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரைநோயில் மூன்று வகை உண்டு. ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்’ என்ற சொலவடை சொல்வதுபோல் ஒவ்வொரு வகையினரையும் ஒவ்வோர்வித எச்சரிக்கை உணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதுதான் முக்கியம். முதலில், ‘டைப் 1 சர்க்கரைநோயா’ல் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து சொல்லிவிடுகிறேன்.

ஒரு வயது, இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே இவர்களுக்கு இந்தச் சர்க்கரைநோய் ஆரம்பித்துவிடுவதால்,அப்போதிருந்தே இவர்கள் இன்சுலின் சிகிச்சையில்தான் இருப்பார்கள். இவர்களுக்குக் கர்ப்ப காலத்திலும் இன்சுலின் கட்டாயம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அடுத்த வகையான ‘டைப் 2 சர்க்கரைநோய்’ 20 வயதுக்கு மேல் வருவது. இவர்கள் பெரும்பாலும் மாத்திரைகள் மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் கர்ப்பத்துக்கு முயற்சிக்கும்போதே சர்க்கரைநோய் மாத்திரைகளை நிறுத்திவிட்டு, இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது சாலச்சிறந்தது. ஏனென்றால், காயை நறுக்கும் கத்தி கொஞ்சம் அசந்தால் விரலையும் நறுக்குவதுபோல் கர்ப்பிணி சாப்பிடும் சர்க்கரைநோய் மாத்திரைகள் வயிற்றில் வளரும் கருவைப் பாதித்து, அதன் இயல்பான வளர்ச்சிப்போக்கை மாற்றி அமைத்துவிடும். அதைத் தவிர்க்கவே இந்த யோசனை.

மூன்றாம் வகையினர்தான் இந்தக் கட்டுரையின் பேசுபொருளாக இருப்பவர்கள். அகிலாவைப்போல் சில பெண்கள் ‘நமக்குத்தான் சர்க்கரைநோய் இல்லையே’ என்று சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள். படுத்துப் படுத்து எழுந்திருப்பார்கள். உடற்பயிற்சியே இருக்காது. இவர்கள் கர்ப்பமானதும், அழைப்பிதழில் இல்லாத பேச்சாளர் மைக் பிடிப்பதுபோல் சர்க்கரைநோய் புதிதாக வந்து சேரும். இதற்குக் ‘கர்ப்பகாலச் சர்க்கரைநோய்’ (Gestational Diabetes Mellitus - GDM) என்று பெயர். பொதுவாக, கர்ப்பம் தரித்த 24–வது வாரத்துக்குப் பிறகுதான் இது வருகிறது.

அடிப்படைக் காரணம்!

கருப்பையில் உள்ள நச்சுக்கொடியில் (Placenta) புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரக்கும். இவை கர்ப்பிணியின் உடலுக்குள் புகுந்து இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும். இன்சுலின் இந்த எதிரணியைச் சமாளித்துப்பார்க்கும். போகப்போக அதன் செயல்பாடு குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கூடிவிடும். இதைச் சரிக்கட்ட கர்ப்ப காலத்தில் மட்டும் பெண்களுக்கு இன்சுலின் சற்றே அதிகமாகச் சுரக்கும். அப்போது ரத்தச் சர்க்கரை சரியான அளவுக்கு வந்துவிடும். இது கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழும் உடல் செயலியல்.

சமயங்களில் ரேஷன் கடையில் அரிசி இருந்தால் பருப்பு இருக்காது. அதுபோல் சில பெண்களுக்குக் கர்ப்பத்தில் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின் சுரந்தாலும் வேண்டிய அளவுக்கு ‘இன்சுலின் ஏற்பான்கள் இருக்காது. அதனால் இன்சுலின் செயல்படாது. இதன் காரணமாக, அவர்களுக்குத் தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அதிகமாகவே இருக்கும். விளைவு, 'கர்ப்பகாலச் சர்க்கரைநோய்'.

யாருக்கு வருகிறது?

ஏற்கனவே குடும்பத்தில் சர்க்கரைநோய் இருக்கும்பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு இந்தப்  பிரச்சினை வருகிறது. உடல் பருமன், ‘பி.சி.ஓ.டி.’ அடுத்த காரணங்கள். இப்போது பெண்களில் பலரும் தாமதமாகவே திருமணம் செய்து, தாமதமாகவே கர்ப்பம் தரிக்கின்றனர். இவை தவிர, கடந்த பிரசவத்தில் இந்த நோய் இருந்தவர்கள், பெரிய தலை/அதிக எடையுடன் குழந்தை பிறந்தவர்கள், குழந்தை இறந்து பிறந்தவர்கள் ஆகியோருக்கும் இது ஏற்படுகிறது. புஷ்டியான சாப்பாடு, உடற்பயிற்சி இல்லாத உடம்பு, கர்ப்பத்தால் ஏற்படும் உடல் அழுத்தம் என்று இன்னும் பல ‘பங்காளிகள்’ ஒன்று சேர்ந்து இந்தத் திடீர் சர்க்கரைநோயை இழுத்துவந்துவிடுகின்றனர்.

என்ன அறிகுறிகள்?

சிலருக்கு அதிக தாகம், அதிகப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பலருக்கும் அகிலாவைப்போல் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாமல் இருக்கலாம். பொதுவாகவே, கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான ரத்தப் பரிசோதனைகளில்தான் இந்த நோய் இருப்பது தெரியவருகிறது.

எப்படித் தெரிந்துகொள்வது?

முதல்முறையாகக் கர்ப்பமானவர்கள் மருத்துவரிடம் வரும்போது முதல் அல்லது இரண்டாம் ‘செக்கப்’பில் ரத்தச் சர்க்கரை பரிசோதிக்கப்படும். வெறும் வயிற்றில் இதன் அளவு 90 மி.கி./டெ.லி.,க்கு அதிகமாகவும்,  சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், ஹெச்பிஏ1சி அளவு 6%க்கு அதிகமாகவும் இருந்தால், வருக்குச் சர்க்கரைநோய் உள்ளது என்று அர்த்தம். அப்போது சர்க்கரைநோய் நிபுணரின் மேற்பார்வையில் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறைகள் பரிந்துரைக்கப்படும்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சர்க்கரைநோய் இல்லாதவர்களுக்கு, 16வது வாரத்தில் ‘குளுக்கோஸ் டாலரென்ஸ்’ (OGTT) பரிசோதனை செய்யப்படும். அதில் ரத்தச் சர்க்கரை 140 மி.கி./டெ.லி. க்குக் கீழ் இருந்தால், சர்க்கரைநோய் இல்லை. அதற்கு அதிகமாக இருந்தால், சர்க்கரைநோய் உள்ளது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பரிசோதனை அவசியம். சிலருக்கு 24வது, 32வது கர்ப்ப வாரங்களிலும் இதை மறுபடியும் மேற்கொள்ள வேண்டியது வரலாம்.

என்ன சிகிச்சை?

கர்ப்பகாலச் சர்க்கரைநோய் உள்ள கர்ப்பிணிகளுக்குப் பெரும்பாலும் இன்சுலின் தேவைப்படாது. சரியான சாப்பாடு மற்றும் முறையான உடற்பயிற்சி மூலமாகவே எளிதில் இதைக் கடந்துவிட முடியும். அப்படியும் ரத்தச் சர்க்கரை கட்டுப்படவில்லை என்றால்தான் இன்சுலின் கொடுக்க வேண்டியது வரும். இதைப் பிரசவம் ஆகும்வரை தொடர வேண்டியது முக்கியம். பலருக்கும் இன்சுலின் எடுத்துக்கொள்வதில் தயக்கம் ஏற்படும். அந்தத் தயக்கம் தேவையில்லை. காரணம், இன்சுலின் சிசுவின் நச்சுக்கொடியைத் தாண்டி உடலுக்குள் செல்லாது. இதனால் சிசுவுக்கு ரத்தச் சர்க்கரை குறைந்துவிடாது. இன்சுலின் காரணமாகக் கர்ப்பிணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை குளுக்கோமீட்டர் மூலம் அவர்களாகவே ரத்தச் சர்க்கரையை அளந்து கொள்ளலாம். அதற்கேற்றபடி இன்சுலின் போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்கு உணவுமுறைதான் முக்கியம்; உடற்பயிற்சிகள் அவசியம். சென்ற வாரம் சொன்ன அதே ஆலோசனைகள்தான் இவர்களுக்கும். என்ன, வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தனி கவனிப்புத் தேவை. கர்ப்பிணிக்கு 28 கர்ப்ப வாரங்களுக்குப் பிறகு மாதம் ஒருமுறை வயிற்றை 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்து, குழந்தையின் வளர்ச்சியைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்றும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காரணம், கடைசி மும்மாத கர்ப்பத்தில் (Third trimester) எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே வயிற்றில் இருக்கும் குழந்தை ‘தவறி’விட சந்தர்ப்பங்கள் உண்டு. எனவேதான் இந்த எச்சரிக்கை.

சர்க்கரைநோய்க்கு அலாரம்!

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் ஆனதும், கர்ப்பகாலச் சர்க்கரைநோய் காற்றில் கரையும் கற்பூரமாய் காணாமல் போய்விடும்; அதற்குப் பிறகு சிகிச்சை தேவைப்படாது. என்றாலும் அவர்களுக்கு அடுத்த 5லிருந்து 10 வருடங்களுக்குள் ‘டைப் 2 சர்க்கரைநோய்’ வர வாய்ப்புள்ளது. ஆகவே, இதை ஓர் எச்சரிக்கை அலாரமாக எடுத்துக்கொண்டு, பிரசவத்துக்குப் பிறகும் சரியான உணவுமுறையைக் கடைப்பிடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரித்து சர்க்கரைநோய் வராமல் தடுத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் கடமை.

பெட்டிச் செய்தி:  

 

சிகிச்சை எடுக்காவிட்டால்?

கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று/ பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். கருச்சிதைவு ஆகலாம். ரத்த அழுத்தம் அதிகரித்து, 'முன்பிரசவ வலிப்பு' (Pre-eclampsia) வரலாம். குழந்தை அதிக எடையுடன்/பெரிய தலையுடன் பிறக்கலாம். குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்; குழந்தை பிறந்ததும் இறந்துவிடலாம். சரியான சிகிச்சையில் ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் இருந்தால், இத்தனை ‘லாம்’களுக்கும் ‘டாட்டா’ காட்டிவிடலாம்!

20. 01. 2019 காமதேனு இதழ்.

டாக்டர் கு. கணேசன், MBBS.

நான் யார்?

பொதுநல மருத்துவன். மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘கணேஷ் மருத்துவமனை’யை நடத்தி வருகிறேன். மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

எழுத்துப் பணி : மருத்துவ அறிவியல் எழுத்தாளர். இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன். தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், குமுதம், குங்குமம், கல்கி, ஹெல்த் & பியூட்டி, டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், குமுதம் ஹெல்த், கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்பு. தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

விருதுகள் : மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதான ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ‘மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப்பேராய விருது’, சென்னை, முத்து பார்மஸியின் ‘சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின் ‘தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இலக்கிய விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன். பாரதிப் பணிச் செல்வர், மருத்துவ இலக்கிய மாமணி எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

குடும்பம் : மனைவி திருமதி லலிதா கணேசன். மகன் டாக்டர் க. திவாகர், MBBS., DNB.,  தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் (Intensivist), (ஜெம் மருத்துவமனை, கோவை). மருமகள் டாக்டர் பௌசியா திவாகர், MD., குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். பேத்தி தியா. மகள் டாக்டர் க. ஆர்த்தி, MBBS.,

முகவரி :

         Dr. G. Ganesan, MBBS.,             Ganesh Hospital,

         53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

         VIRUDHUNAGAR – DT            Mobile: 99524 34190      

         e-mail: gganesan95@gmail.com

         வலைதளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?