குளிர் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்குமா?

 
With the Northern Hemisphere Approaching Winter, Will COVID-19 Get Worse? |  NewsClick

 

 


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


தமிழகத்தில் பருவ மழை தொடங்கிவிட்டது. பனியும் குளிரும் அடுத்து வரக் காத்திருக்கின்றன. வழக்கமாக ஏற்படும் பருவகால ஃபுளூ (Seasional flu), டெங்கு, மலேரியா தொற்றுகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. இந்தச் சூழலில் ஏற்கனவே நம்மிடம் சுற்றம் கொண்டாடும் 'நாவல் கரோனா வைரஸ்' குளிர்காலத்தில் இன்னும் அதிகமாகப் பரவும் என்று அறிவியலாளர்கள் அச்சுறுத்துகின்றனர்.

கரோனா வைரஸ் குழுமம்

நமக்கு சாதாரண ஜலதோஷத்தில் தொடங்கி கடுமையான நிமோனியா வரை பலதரப்பட்ட சுவாச நோய்களை கரோனா வைரஸ் குழுமம் ஏற்படுத்துகிறது. இதில் 7 வகை உள்ளன. மனிதர்களைப் பாதிக்கும் சார்ஸ், மெர்ஸ், நாவல் கரோனா வைரஸ் ஆகிய மூன்றும் கடுமையானவை; மற்றவை மிதமானவை. பொதுவாகவே, மழைக்காலம் தொடங்கி குளிர்காலம் வரை தெற்கு அமெரிக்கா போன்ற மிதவெப்ப நாடுகளில் இந்த வைரஸ்களின் தொற்றுப் பரவல் 10 மடங்கு அதிகரிக்கிறது; இந்தியா போன்ற வெப்பநாடுகளில் 5 மடங்கு அதிகரிக்கிறது. இதை அடிப்படையாக வைத்து 'நாவல் கரோனா வைரஸ்' தொற்றுப் பரவலும் குளிர்காலத்தில் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வரலாறு சொல்வது என்ன?

கடந்தகால நோய் வரலாற்றுப்படி, 1918ல் ஏற்பட்ட இன்ஃபுளூயென்சா பெருந்தொற்றுதான் உலகளவில் குளிர்காலத்தில் பரவிய நோய்களில் மோசமானது. மொத்தம் 5 கோடி  மக்களை அது பலிவாங்கியது. 20ம் நூற்றாண்டின் மற்ற ஆண்டுகளில் இப்படி மோசமான தொற்றுப் பரவலை கரோனா வைரஸ் குழுமம் ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். அடுத்து, நாவல் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய கடந்த 10 மாதங்களில் புவிக்கோளத்தின் தெற்கு அரைக்கோள நாடுகளில் குளிர்காலத்தில் கரோனா தொற்றுப் பரவல் மிதமாகவே இருந்தது என்பதும், பருவகால ஃபுளூ தொற்றுப் பரவலும் குறைந்திருந்தது என்பதும் இதர நல்ல செய்திகள். நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்ததுபோல் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மக்கள் முகக்கவசம் அணிந்ததும், தனி மனித இடைவெளி காத்ததும் பருவகால ஃபுளூ தொற்றையும் தடுத்துவிட்டது என்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தியாவில் ஆராய்ச்சி


அதேநேரத்தில், அந்நிய நாடுகளுக்கும் நமக்கும் பரவச்சூழலில் பல மாறுதல்கள் காணப்படுவதால் கரோனா விஷயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கின்றனர், சூழலியலாளர்கள். இதற்கு இந்தியாவில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஓர் ஆராய்ச்சி முடிவை உதாரணம் காட்டுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை காற்று மாசு அதிகம் என்பதால், இங்கு நிலவும் குளிர்ப்பருவச் சுழல் கரோனா தொற்றை அதிகப்படுத்தவே செய்யும் என்கிறது அந்த ஆராய்ச்சி. ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ளதுபோல் இரண்டாவது அலையாக இல்லாவிட்டால்கூட, தொற்றாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகலாம் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், அந்நிய நாடுகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதையும் தனி மனித இடைவெளி காப்பதையும் முறையாகப் பின்பற்றுகின்றனர். ஆனால், இந்தியாவில் 30% மக்களே இவற்றைப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் அலட்சியமாகவே இருக்கின்றனர். ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

white and blue thermometer at 36 9 

துணை செய்யும் குளிர்காலம்

வழக்கத்தில் குளிர்காலத்தில் நிலவும் உலர் காற்று, வைரஸ் பரவலுக்குத் துணை செய்கிறது. தொற்றாளர்களின் திரவத் திவலைகள் மூலம் வெளிவரும் கரோனா கிருமிகள், அந்தத் திரவம் உலர்ந்த பின்னும் சில மணி நேரம் காற்றில் கலந்திருக்கும். அப்போது எவராவது முகக்கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளி இல்லாமலும் அந்த இடத்துக்கு வருவாரென்றால் அவருக்கும் தொற்று பரவிவிடும். பொதுவாக, வெளியிடங்களைவிட காற்றோட்டம் குறைந்த இடங்களில் இம்மாதிரி கரோனா தொற்று பரவுவது அதிகம். குளிர்காலத்தில் மக்கள்  வீட்டில் முடங்கிக்கிடக்கும் காலமும் நேரமும் அதிகம் என்பதால் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு 19 மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். மேலும், இந்தியாவில் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில்தான் பண்டிகைகளும் வருகின்றன. அப்போது பட்டாசு கொளுத்துதல் வழியாக வளிமண்டலக் காற்று மாசுபடுகிறது. அதுவும் தொற்றுப் பரவலுக்குத் துணைபோகிறது என்கிறார்கள்.

அடுத்து, சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் கரோனா கிருமிகளைக் கட்டுப்படுத்துவது உண்டு. குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவு என்பதால் இந்த வாய்ப்பும் நழுவிவிடுகிறது. மேலும், சூரிய ஒளி மூலம் கிடைக்கும்  வைட்டமின் - டி குளிர்காலத்தில் நமக்குக் குறைந்துவிடும். இதனால் உடலில் நோய்த் தடுப்பாற்றல் குறைந்து, கரோனா தொற்றுக்கு இடம் கொடுத்துவிடும்.

அச்சப்படுத்தும் அறிகுறிகள்!

மழைக்காலத்தில் ஜலதோஷமும் ஃபுளூ காய்ச்சலும் ஏற்படுவது இயல்பு. சிலருக்கு பருவகால ஒவ்வாமையும் (Seasonal allergy) உண்டாவதுண்டு. இவற்றின் அறிகுறிகளும் கரோனா தொற்றின் அறிகுறிகளும் பல விதங்களில் ஒன்றுபோலிருக்கும். எனவே, காய்ச்சல் என்றாலே கரோனாவாக இருக்குமோ என்று அச்சப்படுவதும், தொண்டை வலி என்றாலே கரோனாதான் என்று முடிவுக்கு வருவதும் தேவையில்லை.

ஏற்பட்டது ஜலதோஷமாக இருந்தால், அறிகுறிகள் நிதானமாகத் தோன்றும். முதலில் தொண்டையில் கரகரப்பு, பிறகு மூக்கொழுகல், மூக்கடைப்பு, தும்மல் வரும். மிதமான உடல்வலி, தலைவலி வரும். குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருக்கும்.

ஃபுளூவாக இருந்தால், குளிர் காய்ச்சல் திடீரென்று ஆரம்பிக்கும். இருமல், சளி சேர்ந்துகொள்ளும். தொண்டைவலியும் தலைவலியும் சற்றே கடுமையாகும். குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும்.

பருவகால ஒவ்வாமைதான் காரணம் என்றால், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மூக்கு அரிக்கும்; ஒழுகும். தும்மல் அடிக்கடி வரும். தொண்டை கரகரக்கும். காது குறுகுறுக்கும். இருமல், இளைப்பு வரும். ஒவ்வாமை விலகும்வரை இது படுத்தியெடுக்கும்.

கரோனா தொற்றாக இருந்தால்,  திடீரென குளிர் காய்ச்சல் ஏற்படும். வறட்டு இருமல், மூக்கொழுகல், தொண்டைவலி, தலைவலி, கடுமையான உடல்வலி, அதிக உடல் அசதி, வயிற்றுப்போக்கு, மூக்கில் வாசனை தெரியாமல் இருப்பது, ருசி தெரியாமல் இருப்பது, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் முதன்மையாகக் காணப்படும். ஆக்ஸிஜன் அளவு குறையும். இவற்றில் எல்லோருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்காது. ஒன்றிரண்டு இருந்தாலே மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்வது நல்லது. அறிகுறிகள் மறைந்து சில தினங்கள் கழித்து மறுபடியும் ஏற்படுகிறதென்றால் கரோனா தொற்று முதல்நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குச் செல்கிறது என்று பொருள். உடனடியாக மறுஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த…..

·      வீட்டிலும் அலுவலகத்திலும் கதவு, சன்னல்களைப் பகலில் திறந்துவையுங்கள். அவற்றுக்குத் திரைச் சீலைகளைப் போடாதீர்கள்.

·      அறைகளில் காற்றை வெளித்தள்ளும் ஃபேன்களையும் (Exhaust fans) ஏசி மெஷினில் ‘ஹெப்பா ஃபில்டரையும்’ பொருத்திக்கொள்ளுங்கள்.

·      அறைகளின் மேற்சுவரில் புற ஊதாக்கதிர்கள் மூலம் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகளைப் (Upper room germicidal ultraviolet systems)  பொருத்திக்கொள்ளலாம்.

·          வெளி ஆட்கள் வீட்டுக்கு வரும்போது முகக் கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

·      அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி உதவுமா?


ஃபுளூ காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசி (Influenza vaccine) போட்டுக்கொள்ளலாம். இது கரோனா தொற்றைத் தடுக்காது. ஆனாலும், இந்த இரண்டு வைரஸ்களும் ஆர்.என்.ஏ. வகை என்பதால் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று மிதமான அளவில் அடங்கிவிடுகிறது என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு தீவிரமாகாது; மூச்சுத்திணறல், ரத்த உறைவு போன்ற கடுமையான தொல்லைகள் ஏற்படுவதில்லை; மரண ஆபத்து குறையும் என்பவை இதன் கூடுதல் பலன்கள்.

ஆக, தகுந்த பாதுகாப்புகளைப் பின்பற்றினால், குளிர்காலத்திலும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும். அது நம் கையில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர்,

பொதுநல மருத்துவர்,   

தொடர்புக்கு: gganesan95@gmail.com


31.10.2020 அன்று வந்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘நலம் வாழ’ பகுதியில் என் கட்டுரை.

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?