கரோனா தடுப்பூசிக்குத் தயாராகும் இந்தியா!

 


 

Coronavirus vaccine update: Chinese vaccine shows promise in animal tests |  Business Standard News

 

 


டாக்டர் கு.கணேசன், இராஜபாளையம்.


 

உலக அளவில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவில் 'கோவேக்சின்', 'கோவிஷீல்டு', 'ஜைகோவ்-டி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்ததும், நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  ஆனாலும்,  'தேன் என்று சொல்லிவிட்டால் வாய் இனித்துவிடாது' என்பதுபோல, கரோனோ தடுப்பூசியை மக்களுக்குக் கொண்டுசெல்வதில் ஆகப்பெரிய சவால்களும் காத்திருக்கின்றன.

குளிர்ச் சங்கிலியின் அவசியம்!


தடுப்பூசி தயாரிக்கும் இடம் தொடங்கி பயனாளிக்குப் பயன்படும் காலம் வரை தடுப்பூசிகளைச் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கும் வழிமுறைக்குக் ‘குளிர்ச் சங்கிலி’ (Cold Chain) என்று பெயர். தடுப்பூசிகள் முறையாகச் செயல்பட, இருப்பு வைத்தல், போக்குவரத்து, மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட இந்தச் சங்கிலியின் அங்கங்கள் சரியாக அமைய வேண்டும். இந்தியா போன்ற வெப்பநாடுகளில் இதுதான் மிகப்பெரிய சவால்.

இப்போதுள்ள குளிர்ப்பதன சேமிப்பு அறைகளும் (Walk - in cold rooms), சேமிப்பு மனைகளும் வழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளைப் பாதுகாக்கும்படியாக 2 லிருந்து 8 டிகிரி செல்சியஸ் வரையுள்ள வெப்பநிலைக்கு ஏற்றவை. புதிய தடுப்பூசிகள் சிலவற்றுக்கு, மைனஸ் 70லிருந்து மைனஸ் 80 செல்சியஸ் வரை வெப்பநிலை தேவைப்படுவதாகத் தெரிகிறது. (எடுத்துக்காட்டு, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள ‘எம்.ஆர்.என்.ஏ’ தொழில்நுட்பத் தடுப்பூசி). அப்படியானால், இதற்குத் தகுந்தாற்போல் குளிர்ச் சங்கிலியை மாற்ற வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டைச் செய்வது என்பது உப்பு இல்லாமல் விருந்து சமைக்கும் சிரமத்துக்குச் சமம்.

அடுத்து,  நாட்டில் இப்போதுள்ள குளிர்ப்பதன சேமிப்பு அறைகளும் சேமிப்பு மனைகளும்  வழக்கமான தடுப்பூசிகளை இருப்புவைப்பதற்கே போதுமானதாக இருக்கின்றன. புதிதாக வரவிருக்கும் பல கோடி கரோனா தடுப்பூசிகளுக்குத் தனி சேமிப்பு மனைகளே தேவைப்படுகின்றன. கரோனா தடுப்பூசி கைக்கு வருவதற்கு முன்னால் இதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் மருந்து நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Centre to map out cold chain storage facilities for Covid-19 vaccine  delivery | India News - Times of India

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், தடுப்பூசிகளை இருப்புவைக்க பெருநகரங்களில் தங்குதடையற்ற மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் சேமிப்பு மனைகளைக் கட்டினால்தான் முறையான குளிர்ப்பதன பாதுகாப்பு கிடைக்கும். இல்லையென்றால், சூரிய மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான முதலீடு அதிகம். அதனால் நாட்டில் ஏற்கனவே உள்ள உணவுப்பதப்படுத்துதல் மற்றும் வேளாண்துறை தொடர்பான சேமிப்பு மனைகளைப் பயன்படுத்தலாமா எனும் யோசனையும் அரசுக்கு உள்ளது.

தேவை அதிக சரக்கு வாகனங்கள்!


சேமிப்பு மனைகளிலிருந்து தரைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய வழிகளில் பயனாளி இருக்கும் இடங்களுக்குத் தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக அனுப்புவது அடுத்த பெரிய சவால். எப்படியெனில், இந்தப் போக்குவரத்துக்குப் பயன்படும் சரக்கு வாகனங்களின் தேவை பல மடங்கு அதிகரிப்பதோடு, அவற்றில் ‘பனியுறை குளிர்ப்பதனப்பெட்டிகள்’ (Ice lined refrigerators)  ‘ஏந்து உறைப்பேழை’கள் (Portable freezer) உள்ளிட்ட வசதிகளையும் இணைத்துத் தடுப்பூசியின் பாதுகாப்பான பயணத்துக்கு உறுதியளிக்க வேண்டும். அடுத்ததாக,     மொத்தமுள்ள உலக மக்களுக்குக் கரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டும் போடப்படுவதாக இருந்தால், அவற்றைக் கொண்டுசெல்வதற்கு போயிங் 747 ரக சரக்கு விமானங்கள் 8,000 தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கின்படி இந்தியாவின் விமானத் தேவையும் கணிசமாக உயரும். இந்தப் புதிய தேவைக்கு ஏற்கெனவே இருக்கும் சரக்கு விமானங்களைப் பயன்படுத்தலாம் என்றால், வழக்கமான சரக்குகளைப் பயனாளிகளுக்கு உரிய நேரத்துக்கு அனுப்ப முடியாமல் அந்த வணிகம் பாதிக்கப்படும் எனும் அச்சம் தடை போடுகிறது. மாற்றாக, பயணிகளின் விமானங்களைத் தற்காலிகமாகச் சரக்கு விமானங்களாக மாற்றி அமைக்கவும் ஆலோசனை உள்ளது.

சமூகம் தயாராக வேண்டும்!

இந்தியாவுக்குத் தடுப்பூசி தயாரிப்பிலும் அதன் விநியோகத்திலும் நிறைய அனுபவம் உண்டு. ஆனாலும், கரோனா தடுப்பூசி புதிய அனுபவத்தைத் தருகிறது. வழக்கத்தில் உள்ள தேசியத் தடுப்பூசித் திட்டம், போலியோ ஒழிப்புத் திட்டம், இந்திரதனுஷ் ஆகியவை குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஆனவை. இந்தத் தடுப்பூசிகளை எப்போது, எங்கே போட்டுக்கொள்வது என்று இவர்களுக்குப் பலமுறை ‘பாடம்’ எடுத்திருக்கிறோம். அதனால், அவர்கள் மனதளவில் அதற்குத் தயாராகிவிட்டபடியால் இந்தத் தடுப்பூசிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், கரோனா தடுப்பூசி பெரியவர்களுக்கானதா, குழந்தைகளுக்குமானதா, ஒரு தவணை போடக்கூடியதா, இரண்டு, மூன்று தவணைகள் தேவைப்படுமா எனும் விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. இப்போதைக்கு முதல் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 26 கோடிப் பேருக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள், இளம்வயதிலேயே நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட துணைநோய்கள் உள்ளவர்கள் என 4 கோடிப் பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. கரோனா பெருந்தொற்றை ஒழிக்க, நாட்டில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பெரியவர்களுக்கு மொத்தமாகப் போடப்படும் தடுப்பூசி இது.

இதை ஏற்றுக்கொள்வதற்கு முதலில் மூத்த சமூகம் தன்னளவில் தயாராக வேண்டும். காரணம், இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் இல்லை. மனத்தயக்கம் பெரிதும் தடைபோடும். அந்தத் தடையைத் தகர்க்க, போலியோ ஒழிப்பில் பின்பற்றியதுபோல், இவர்களுக்குத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்லவும் தொண்டு நிறுவனங்களின் உதவி அதிகம் தேவைப்படும்.  

 அடுத்து, இப்போதுள்ள மருத்துவக் கட்டமைப்புகளின் போதாமைகளையும் களைய வேண்டும். குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் ஆழ்உறைப்பேழைகளையும் (Deep freezer), குளிர்ப் பெட்டிகளையும் (Cold Box) அதிகப்படுத்த வேண்டும். வழக்கமாகத் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களையே கரோனா தடுப்பூசித் திட்டத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனச் செயல்திட்டமிட்டால், பழைய தடுப்பூசித் திட்டங்கள் முடங்கிவிட வாய்ப்புண்டு. 'வாக்குச் சாவடி'களுக்கு ஓட்டுப்போட வரவழைப்பதுபோல் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான பேரைத் தடுப்பூசி போட வரவழைத்துவிடலாம் என்று கனவு காண முடியாது. காரணம், தடுப்பூசியைப் போடவும் அதன் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பின்விளைவுகளைக் கண்காணித்து எதிர்கொள்ளவும் மருத்துவத் துறையினரும் சுகாதாரப் பணியாளர்களும்தான் தகுதிபெற்றவர்கள். ஆசிரியர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் புள்ளிவிவரம் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, கரோனா தடுப்பூசிப் பணிக்கு இன்னும் நிறைய சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதேவேளையில், வீழ்ந்துபோன பொருளாதாரக் காரணங்களால் புதிதாகப் பணியாளர்களை அமர்த்துவது அரசுகளுக்குச் சவாலாக இருக்கும்.

ஆகமொத்தத்தில், கரோனா தடுப்பூசி தயாரிப்பில் காட்டப்படும் முனைப்பும் முன்னெடுப்புகளும் அதை விநியோகிக்கும் வழிகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் தேவைப்படுகின்றன. ஒன்றிய அரசும் மாநில அரசும் போதிய நிதி ஒதுக்கி, விரிவான செயல்திட்டங்களை விரைவில் தயாரித்து, போர்க்கால நடவடிக்கைபோல் செயல்படுத்தினால் மட்டுமே தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். அந்த வழியில் கரோனாவை வெற்றிகொள்ளவும் முடியும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com


30.10.2020 அன்று வந்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தலையங்கம் பக்கத்தில் என் கட்டுரை:

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?